அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

ஹோம் ஒர்க்.. பள்ளிகளின் தலையில் குட்டு வைத்த ஹைகோர்ட்.. என்று ஒழியும் இந்த வீட்டுப் பாட துயரம்!

அரசின் கையிலேயே இருந்து செயல்படக்கூடிய கல்வித்துறை இன்று தனியாரிடம் மண்டியிட்டு கிடக்கிறது.
இதனால், பிள்ளைகளின்மேல் பெற்றோர்கள் வைக்கின்ற பாசம் பணமாக வசூலிக்கப்பட்டு, லட்சங்களும், கோடிகளும் புரளும் வணிகதுறையாக இன்று கல்வித்துறை உருமாறி நிற்கிறது. அதேசமயம் தனியார் பள்ளியின் அசுரத்திற்கு ஏற்றார்போல் அரசு பள்ளியும் அதல பாதாளத்தில் சென்று கொண்டுள்ளதையும் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.
சுண்டியிழுக்கும் பெயர்பலகை, நவீன பாடத்திட்டம், கண்ணைகவரும் சீருடை போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களில் வளைத்துபோட்டு வரும் தனியார் பள்ளிகளின் தலையில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு குட்டு வைத்துள்ளது. சிபிஎஸ்இ 1, 2-ம் வகுப்பு மாணவர்கள் வீட்டு பாடம் செய்ய தேவையில்லை என்றும், மீறி பள்ளிகளில் வீட்டுப்பாடம் கொடுத்தால் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் ஒரு அப்பள்ளிகளுக்கு கடிவாளத்தை போட்டு மழலை மாணவர்களை காப்பாற்றியுள்ளது. இதன்மூலம் சிபிஎஸ்இ பள்ளி குழந்தைகளுக்கு தற்போது ஒரு விடிவு காலம் பிறந்திருக்கிறது.
திணிக்கும் வீட்டு பாடங்கள் 
ஹோம் ஒர்க் அட்டகாசங்கள்
மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் ஹோம் ஒர்க் அட்டகாசங்கள் பெருகி விட்டன. 1-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர், பொது அறிவு, இந்தி உள்பட 8 பாட பிரிவுகள் திணிக்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் மனதளவிலும், உடலளவிலும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஹோம் ஒர்க, ப்ராஜக்ட் என்ற பெயரில் மாணவர்களுக்கு கொடுக்கும் அனைத்தையும் கடைசியில் செய்வது பெரும்பாலும் பெற்றோர்களாகவே உள்ளது. இதனால் பிள்ளைகளுக்கு ப்ராஜக்ட் வொர்க் என்றாலே அலறும் பெற்றோர்களும் உண்டு. துரத்தும் இந்த ஹோம் ஒர்க் பூதத்திலிருந்து தப்பிக்க வயிற்று வலி உட்பட அனைத்தையும் சொல்லி மாணவர்கள் காலம் காலமாக தப்பிக்க முயலுவது பரிதாபகரமானது. சனி, ஞாயிறு விடுமுறையோ அல்லது கோடைவிடுமுறையோ, அதிலும் ஹோம் ஒர்க் கொடுத்துதான் இந்த பள்ளிகள் அனுப்புகின்றன. இதனால் வீட்டுப்பாடம் செய்து தரும் அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் என அனைவருமே அந்த குழந்தைகளுக்கு ஆசிரியர்களாகி விடுகிறார்கள். ஹோம் ஒர்க், ப்ராஜக்ட் செய்யும் குடும்ப உறுப்பினர்களோ மாணவர்களாகி விடுகிறார்கள்.

கல்விமேல் பிடிப்பு இல்லை
புகார்களால் புழுங்கும் பிள்ளைகள்
ஹோம் ஒர்க் சில நேரங்களில் அனைத்து மாணவர்களாலும் எழுத முடியாமல் போய்விடுகிறது. இதற்கு குடும்ப பின்னணி, உடல்நலம், தொடர்ச்சியான வகுப்பு தேர்வுகள், மன அழுத்தம் போன்றவை காரணங்களாக உள்ளன. ஹோம் ஒர்க் செய்ய முடியாத அந்த பிள்ளைகள் மறுநாள் சக மாணவர்கள் முன்னிலையில் தனியாக நிற்க வைக்கப்படும் நிலை ஏற்படுகிறது. பின்னர் பெற்றோர்களை வரவழைத்து, உங்க பையன் எழுத மாட்டேங்கறான், விளையாடிட்டே இருக்கான், பேசிட்டே இருக்கான் என புகார்களை ஆசிரியர்கள் சொல்ல சொல்ல... பெற்றோர்களோ தங்கள் குழந்தைகளை பார்வையாலேயே முறைத்து துளைக்க.. அந்த குழந்தையோ பயம், அவமானம், அச்சத்திலே புழுங்க.. கல்வியின் மீதே அந்த குழந்தைகளுக்கு பிடிப்பு இல்லாத நிலை உருவாக தொடங்குகிறது. நெருக்கடி இல்லாத குடும்ப சூழல், முழுக்க முழுக்க தங்கள் பிள்ளைகளுடனே முழு நேரத்தை செலவிடும் பெற்றோர்கள் இருந்தால் மட்டுமே ஹோம் வொர்க் என்பது ஓரளவு சாத்தியமாகிறது.
அனைத்தையும் இழக்கும் பெற்றோர்
அதிகாரங்களின் உச்சம்
அனைத்திலும் பங்சுவாலிட்டி பார்க்கும் இந்த பள்ளிகள் மாணவர்களிடமிருந்து ஏதாவது புகார் என்றால் எப்போது வேண்டுமானாலும் பெற்றோரை அழைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளது. யார் என்ன, எவ்வளவு முக்கிய பொறுப்பில் இருந்தாலும் அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு விழுந்தடித்துக் கொண்டு பள்ளியில் நிற்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். தங்கள் தரப்பில் எவ்வளவு நியாயமான விஷயங்கள் இருந்தாலும் அதனை விவரிக்க பெற்றோரால் முடிவதில்லை. பள்ளி முதல்வரை பெற்றோர் எதிர்த்து பேச ஒருவித தயக்கம். மீறி குரல் எழுப்பிவிட்டால், அது அவர்களின் குழந்தைகள் மீது ஏதாவது ஒரு வகையில் திரும்பிவிடுமோ என்ற அச்சம். தனியார் பள்ளிகளின் பணம் மற்றும் கெடுபிடிகளில் நடுத்தர, மற்றும் உயர்தர வகுப்பு பெற்றோர்கள் சிக்கி தங்களது பெருமை, அந்தஸ்து, மாண்பு, மரியாதைகளை இழக்கவும் நேரிடுகிறது.

கட்டண கொள்ளை
மாணவர்களுக்கு சுயசிந்தனை தேவை

அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாலேயே தரமான பள்ளி என்ற மாயை பொதுவாக நிலவி வருகிறது. ஆனால் கல்வித்தரமோ ஆயிரம் கேள்விக்குறிகள்தான். கட்டணத்திற்கேற்றார்போல் கல்வித்தரம் தருவதாக ஒப்புக் கொள்ள முடியாது. முறையற்ற கட்டணங்களை வசூல் செய்வதற்கு பெற்றோர்கள் உடந்தையாக இருக்க கூடாது. அதேபோல பள்ளிகளின் கட்டண வசூலில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். கற்பித்தல் இருந்தால் மட்டுமே அந்த குழந்தை பிற்காலத்தில் முழு மனிதாக பரிணமிக்க முடியும். பயிற்றுவித்தல் இருந்தால், மனப்பாட இயந்திரங்கள்தான் பள்ளிகளால் உற்பத்தி செய்யப்படுவார்கள். மதிப்பெண்களை வைத்து மாணவர்களை தரம் பார்ப்பது நீக்கப்பட வேண்டும். அதேபோல, மனப்பாட பாடமுறை தூக்கியெறியப்பட்டு சுயமாக சிந்திக்கும் திறனுள்ள மாணவ சமுதாயம் உருவாக்கப்பட அரசு வழி செய்ய வேண்டும்.
Reactions

Post a Comment

0 Comments