அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

பள்ளி பொது தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிப்பு 'ரிசல்ட்' தேதியும் முன்கூட்டியே வெளியீடு

அடுத்த ஆண்டில் நடக்க உள்ள, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகளை, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் நேற்று வெளியிட்டார்.


பள்ளி,பொது தேர்வு,தேதிகள்,அறிவிப்பு,ரிசல்ட்,தேதி,முன்கூட்டியே,வெளியீடு

கடந்த ஆண்டை போலவே, நடப்பு கல்வி ஆண்டு துவக்கத்திலேயே, பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் தேதிகளையும், அவற்றின் முடிவுகள் வெளியாகும் தேதிகளையும், அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி, தயார் செய்துள்ளார். அதை, சென்னை, தலைமைசெயலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.

* அதன்படி, பிளஸ் 2 தேர்வு, 2019 மார்ச், 1ல் துவங்கி, 19ல் முடிகிறது. தேர்வு முடிவுகள், ஏப்., 19ல் வெளியாகின்றன. பிளஸ் 1 தேர்வு, மார்ச், 6ல் துவங்கி, 22ல் முடிகிறது.தேர்வு முடிவுகள், மே, 8ல் வெளியாகின்றன. 10ம் வகுப்பு தேர்வு, மார்ச், 14ல் துவங்கி, 29ல் முடிகிறது. ஏப்., 29ல், தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன

* கடந்த ஆண்டு, பிளஸ் 1ல், 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதியவர்கள், இந்த ஆண்டு பிளஸ் 2 படிக்கின்றனர். அவர்களுக்கு, ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 100 மதிப்பெண் வீதம், இரண்டரை மணி நேரம் தேர்வு நடத்தப்படும்

* கடந்த ஆண்டு வரை, பிளஸ் 2 படித்து, 1,200 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதி, சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, பழைய முறைப்படி, ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 200 மதிப்பெண் வீதம், 1,200 மதிப்பெண்களுக்கு, மூன்று மணி நேரம் தேர்வு நடத்தப்படும். இரண்டு பிரிவினருக்கும், காலையில் தேர்வு துவங்கி, மதியம் முடியும்

* இந்த ஆண்டு, புதிதாக அமலுக்கு வந்துள்ள, மொழி பாடத்தாள் குறைப்புப்படி, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும், பழைய, புதிய மாணவர்களுக்கும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், ஒரு தாளுக்கு மட்டுமே, தேர்வு நடத்தப்படும்.

இவ்வளவு இடைவெளி தேவையா:

அட்டவணைப்படி பிளஸ் 2 தேர்வு மார்ச் 1 துவங்கி 19 ம்தேதி வரை நடக்கிறது. தமிழ், ஆங்கிலம் மொழிப்பாடங்கள் ஒரு தாளாக குறைக்கப்பட்ட பின்பு, 6 தாள்களுக்கு தேர்வு நடக்கிறது. ஞாயிறு விடுமுறை தவிர, தினமும் தேர்வு நடத்தி 1 ம் தேதி முதல் 7ம் தேதிக்குள் தேர்வை முடித்து விடலாம். ஆனால் தமிழ் தேர்வுக்கும் ஆங்கில தேர்வுக்கும் இடையே 4 நாட்கள் இடைவெளி உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 14ல் துவங்கி29 ம் தேதி வரை நடக்கிறது. ஏழு தாள்கள் உள்ள, தேர்வை நடத்த 15 நாட்கள் தேவைப்படுகிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் இடையில், இடைவெளி அதிகம் வருவதால் மாணவர்கள் சோர்வடைகின்றனர். நிறைய நாட்கள் தேர்வு பீதியில் இருக்க வேண்டி உள்ளது. அதற்கு பதிலாக ஞாயிறு விடுமுறை தவிர தொடர்ச்சியாக இந்த தேர்வையும் நடத்தலாம். தேர்வுக்கு 8 மாதங்கள் உள்ளதால், இப்போதே தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் தயாராவது எளிது. எனவே தேர்வு நேரத்தில் படிப்பதற்கு என்று நாட்கள் தேவையில்லை. மனநல மருத்துவர் வி.ராமானுஜம் கூறுகையில், ''சீக்கிரம் தேர்வு முடிந்தால், ஒரே உந்துதலோடு படித்து எழுதிவிடலாம். ஒவ்வொரு தேர்வுக்கு இடையே விடுமுறை இருந்தால், ஒருவித சோம்பேறித்தனம் ஏற்படுவதாக மாணவர்கள் உணருகின்றனர். ஒரு ஆண்டு காலம் படிக்கமுடியாத பாடத்தை எப்படி குறிப்பிட்ட நாட்களுக்குள் படித்துவிட முடியும்.

எனவே தேர்வுக்கு இடைவெளி, விடுமுறை தேவையற்றது,'' என்றார்.மார்ச் 1 ம் தேதி துவங்கி பிளஸ் 2 தேர்வை காலையிலும், பத்தாம் வகுப்பை தேர்வை மதியமும் நடத்தினால் அதிகபட்சம் 10 ம் தேதிக்குள் இரண்டு தேர்வையும் முடித்து விடலாம். அதற்கு பிறகு பிளஸ் 1 தேர்வை நடத்தலாம். இதனால் தேர்வுப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் எளிதாக இருக்கும். கடந்த ஆண்டு பொதுத்தேர்வுகள் துவங்கி முடிய 35 நாட்கள் ஆனது. அந்த வகையில் இந்தமுறை நாட்கள் இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது. இன்னும் குறைக்க வேண்டும். கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கவனிப்பாரா?
Reactions

Post a Comment

0 Comments