அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

கண்டுபிடிப்புகளின் கதை: பென்சில்

எழுதியதையும் வரைந்ததையும் அழித்து, அழித்து சரி செய்வதற்கு பென்சிலை விட்டால் வேறு வழி இல்லை. கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை பென்ல்களின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பேனா வந்தபோதும் பென்ல்களின் செல்வாக்குக் குறையவே இல்லை.
ரோமானியர்கள் பாபிரஸ் தாள்களில் கூரான உலோகத்தால் செய்யப்பட்ட ‘ஸ்டைலஸ்’ என்ற பொருளால் எழுதி, அந்தத் தடங்களைப் பார்த்துப் படித்தனர். பிறகு ஸ்டைலஸுக்குப் பதிலாக காரீயக் குச்சிகளால் (Lead) எழுத ஆரம்பித்தனர். இதுவே நீண்ட காலத்துக்குப் பயன்பாட்டில் இருந்தது. 1564-ம் ஆண்டு இங்கிலாந்தில் பெருமளவில் கிராபைட் (கறுப்பு கார்பன்) கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கிராபைட் எழுதுவதற்கு எளிதாக இருந்ததால், ஆடுகள் மீது அடையாளம் இடப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.
இத்தாலியைச் சேர்ந்த சிமோனியோ, லின்டியானா தம்பதி, கிராபைட் குச்சியை வைத்து எழுத ஆரம்பித்தனர். இப்படித்தான் முதல் பென்சில் உருவானது. அவர்களே சில முயற்சிகளுக்குப் பிறகு மென்மையான மர உருளையை இரண்டாக வெட்டி, நடுவில் குடைந்து, அதற்குள் கிராபைட் குச்சியை வைத்து, பசையால் ஒட்டி பென்சில்களை உருவாக்கினார்கள். இந்தத் தயாரிப்பு முறைதான் இன்றளவும் பென்சில் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1662-ம் ஆண்டு ஜெர்மனியில் கிராபைட் துகள்களில் இருந்து பென்சில்கள் தயாரிக்கப்பட்டன.
அடுத்த முன்னேற்றத்தைக் கொண்டுவந்தவர் பிரான்ஸைச் சேர்ந்த நிகோலஸ் ஜாக் கோன்ட்டே. 1795-ம் ஆண்டு கிராபைட் துகளுடன் களிமண்ணையும் சேர்த்து, இன்றைய நவீன பென்சிலை உருவாக்கினார். கிராபைட், களிமண் அளவை மாற்றி, பென்சில்களை உருவாக்கும்போது அழுத்தத்திலும் நிறத்திலும் மாற்றம் ஏற்பட்டது.
ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஜோசப் ஹார்ட்மத், 1790-ம் ஆண்டு Koh-I-Noor என்ற பென்சில் தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பித்தார். 1802-ம் ஆண்டு உரிமம் பெற்று, வியன்னாவில் பெருமளவில் பென்சில்களைத் தயாரித்த இந்த நிறுவனம், இன்றளவும் முக்கியத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது.
பென்சில் தயாரிப்பு உலகம் முழுதும் பரவ ஆரம்பித்தது.  உருளை, அறுங்கோண வடிவில் மரக்குச்சியை உருவாக்கி, அதற்குள் களிமண் கலந்த கிராபைட் வைக்கப்பட்டு பென்சில்கள் உருவாக்கப்பட்டன. சாம்பல் வண்ணத்திலிருந்து அடர் கறுப்பு வண்ணம்வரை எழுத்துகள் கிடைக்கும்படி இந்த பென்சில்கள் தயாரிக்கப்படுகின்றன. எழுத்துகளை அழிப்பதற்கு ரப்பர் கண்டுபிடிக்கப்பட்ட பின் பென்சில்களின் பயன்பாடு அதிகரித்தது.
ரப்பர் வைத்த பென்சில், பிளாஸ்டிக் உருளைக்குள் கிராபைட் குச்சிகள் வைத்த பென்சில், கிராபைட் இங்க் பென்சில், வண்ண பென்சில் என்று ஏராளமான வகைகள் வந்துவிட்டன. வண்ண பென்சில்களில் மெழுகும் வண்ணமும் சேர்க்கப்படுகின்றன.
ஐரோப்பாவில் தயாராகும் பென்சில்களில் HB என்று குறிப்பிடப்பட்டிருக்கும். B கறுப்பையும் H கடினத் தன்மையையும் குறிக்கின்றன. அமெரிக்காவில் தயாராகும் பென்சில்களில் கடினத் தன்மையைக் குறிப்பதற்கு எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதைப் பார்த்து நமக்குத் தேவையான பென்சில்களை வாங்கிக் கொள்ளலாம்.
பென்சில், வண்ண பென்சில் தயாரிப்பில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. ஜெர்மனியும் பிரேசிலும் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.
ஒரு பென்சிலில் சுமார் 35 மைல் தூரத்துக்குக் கோடு போடலாம், 45 ஆயிரம் வார்த்தைகளை எழுதலாம் என்கிறார்கள். இன்றும் பென்சிலை ஆரம்பக் காலத்தில் பயன்படுத்தியதுபோல் ‘லெட் பென்சில்’ என்றே பலரும் அழைக்கின்றனர். ஆனால், லெட் பென்சில்களே இப்போது கிடையாது. கிராபைட், களிமண் பென்சில்களே பயன்பாட்டில் இருக்கின்றன.
(கண்டுபிடிப்போம்)
Reactions

Post a Comment

0 Comments