அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

தேர்தல் எப்போது?

1613018681622

கட்சிகளின் வலியுறுத்தல் மற்றும் விடுமுறை தினங்கள் அடிப்படையில் ஏப்ரல் இறுதி வாரத்தில் தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தில் தற்போதுள்ள 15-வது சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதம் முடிவடைகிறது. இதையடுத்து சட்டப்பேரவை பொதுத்தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.


வாக்குச்சாவடிகள் அதிகரிப்பு பணிகள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரவழைப்பு மற்றும் சரிபார்ப்பு பணிகள் வாக்குச்சாவடிகளில் தேவையான வசதிகள் உருவாக்கம் என அனைத்து விதமான பணிகளையும் முடித்துவிட்ட தேர்தல் ஆணையம், மாநிலத்தில் உள்ளூர் விடுமுறை, மாநில விடுமுறை தினங்கள் குறித்த தகவல்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கேட்டது. அவரும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் தகவல்களை கேட்டு, அவற்றை தொகுத்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளார்.

இதுதவிர, தற்போது தமிழகம் வந்துள்ள தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்துள்ளனர். அப்போது, அனைத்து கட்சிகளும் ஒரே கட்டமாக ஒரே நாளில் தமிழக சட்டப்பேரவை தேர்தலை நடத்த கோரிக்கை விடுத்துள்ளன.

அதிமுக சார்பில், கடந்த முறை மே மாதம் அதிகளவில் வெப்பம் இருந்ததால் வாக்காளர்கள் வாக்களிக்க சிரமப்பட்டனர். எனவே, இந்த முறை ஏப்ரல் இறுதி வாரத்தில் தேர்தலை நடத்த வேண்டும். அப்போதும் வாக்காளர்களுக்கு தேவையான நிழல், குடிநீர் வசதிகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.


பாஜகவோ, ஏப்ரல் மாதத்தில் தமிழக மக்கள் கொண்டாடும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தை ஒட்டி தேர்தலை அறிவிக்க வேண்டாம். அதன்பின்பாக தேர்தல் நடத்தும் வகையில் தேதியை இறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. திமுகவோ எப்போது தேர்தல் நடந்தாலும் நாங்கள் தயாராக உள்ளோம் என்று தெரிவித்துள்ளது.


அரசியல் கட்சிகளின் கோரிக்கை, மாநில தேர்தல் அதிகாரியின் அறிக்கை ஆகியவற்றை பரிசீலித்து, ஏப்ரல் இறுதி வாரத்தை பொறுத்தவரை பெரும்பாலும் எந்த நிகழ்வுகளும் இல்லாத சூழலில், அதில் ஒருநாள் தேர்தல் தேதியாக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், தேர்தல் தொடர்பான அறிவிப்பும் இம்மாத இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Reactions

Post a Comment

0 Comments