அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

SCIENCE DOSE - மழை வரும்போது மட்டும் மண் வாசனை எப்படி வருகிறது ???

மண் வாசனை உனக்குப் பிடிக்குமா? மழை வரும்போது மட்டும் மண் வாசனை எப்படி வருகிறது டிங்கு?– க. தீக்ஷிதா, 8-ம் வகுப்பு,  எஸ்.ஆர்.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.
மண் வாசனையை யாருக்குத்தான் பிடிக்காது! நாம் மண் வாசனை என்று சொன்னாலும் இது மண்ணிலிருந்து வரக்கூடிய வாசனை அல்ல தீக்ஷிதா. மண்ணில் இருக்கும் ஆக்டினோமைசீஸ் என்ற பாக்டீரியாக்கள் மீது மழைத்துளி பட்டவுடன் வேதிவினை நடைபெறுகிறது. இதனால் பாக்டீரியாக்களில் இருந்து இனிமையான மணம் வெளிவருகிறது. இதைத் தான் நாம் மண் வாசனை என்று அழைக்கிறோம்.
பிரானா மீன்கள் மனிதர்களை வேட்டையாடக்கூடியவை என்று சொல்கிறார்களே, உண்மையா டிங்கு? –சரவணன், 11-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பள்ளி, சமயபுரம்.
பிரானா மீன்களின் பற்கள் எதையும் கடித்துக் கிழிக்கக்கூடிய அளவுக்கு மிகவும் கூர்மையானவை. தாடைகளும் வலிமையானவை. அதனால் தங்களைவிடப் பெரிய விலங்குகளைக் கூட இவை கூட்டமாகச் சேர்ந்து வேட்டையாடிவிடுகின்றன. இவற்றில் சிவப்பு வயிறு பிரானாக்கள்தான் அதிக வலிமையுடையவை. எப்போதும் கூட்டமாக இரை தேடிச் செல்கின்றன. இரை அகப்பட்டால் வெகு விரைவில் சதையைத் தின்று, எலும்பை மட்டும் விட்டுவிடுகின்றன. மனிதர்கள் மீதும் பிரானாக்கள் தாக்குதல் நடத்துவதாகச் சொன்னாலும், ஆராய்ச்சியாளர்கள் அதில் உண்மை இல்லை என்கிறார்கள்.

ஆற்றில் தவறி விழுந்து இறந்தவர்கள், மாரடைப்பால் இறந்தவர்களைத்தான் பிரானாக்கள் தாக்கியிருக்கின்றன. உயிருடன் இருக்கும் மனிதர்களைத் தாக்கும் சாத்தியம் அதிகம் இல்லை என்கிறார்கள். அதனால் பிரானாக்களால் மனிதர்களுக்கு ஆபத்து இல்லை, மனிதர்களால்தான் பிரானாக்களுக்கு ஆபத்து. ஏனென்றால் பிரானாக்களை மனிதர்கள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள், சரவணன்.
மனிதர்களுக்கு ஆபத்து, பூமி அழியப் போகிறது என்று நிறைய ஹாலிவுட் திரைப்படங்களை எடுக்கிறார்களே, அது ஏன் டிங்கு? – வி. பர்வதவர்தினி, காரைக்கால்.
அமெரிக்கா மிகப் பெரிய வல்லரசு நாடு. உலகம் முழுவதையும் தன் சக்தியைக் காட்டி மிரட்டிக்கொண்டிருக்கிறது. அதனால் அமெரிக்கர்களுக்கு மற்ற நாட்டவர்களால் எந்த ஆபத்தும் வராது என்பதால், அவர்கள் இல்லாத ஒன்றை நினைத்து பயப்படுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதனால்தான் அழிந்துபோன டைனோசர் மீண்டும் வருவதுபோலவும் நிலம் தண்ணீரால் மூழ்குவதுபோலவும் வேற்றுகிரகவாசிகளால் அழிவு ஏற்படுவதுபோலவும் திரைப்படம் எடுத்து ரசிக்கிறார்கள் என்று நினைக்கிறேன், பர்வதவர்தினி.
மிக்கி மவுஸ் எப்போது உருவாக்கப்பட்டது டிங்கு? –ஆர். ரஞ்சித், ஒத்தக்கடை, மதுரை.
1928-ம் ஆண்டு நவம்பர் மாதம், வால்ட் டிஸ்னி நிறுவனம் வெளியிட்ட ’ஸ்டீம்போட் வில்லி’ என்கிற குறும்படம் மூலம் மக்களின் பார்வைக்கு முதன்முதலில் வந்தது மிக்கி மவுஸ். உலகம் முழுவதும் ஏராளமான மக்களின் உள்ளங்களைக் கொள்ளைகொண்ட மிக்கி மவுஸின் வயது 89. அந்தக் கால தாத்தாக்களும் பாட்டிகளும் ரசித்த மிக்கி மவுஸை, இன்று நாமும் ரசிக்கிறோம். நாளை அடுத்த தலைமுறையும் ரசிக்கும், ரஞ்சித்.
Thanks to : the hindu
Reactions

Post a Comment

0 Comments