அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

டிங்குவிடம் கேளுங்கள்: மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிக்குமா?

குளிர்ந்த நீரில் குளித்தால் உடலுக்கு நல்லது என்று சொல்லும் அம்மா, மழையில் நனைந்தால் சளிப் பிடித்துவிடும் என்று எச்சரிக்கிறாரே ஏன், டிங்கு?
–மு. ராஜேஸ்வரன், 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர்.
நல்ல கேள்வி ராஜேஸ்வரன். குளிர்ந்த நீரில் குளித்தால் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், சுறுசுறுப்பு அதிகரிக்கும் போன்ற காரணங்களால் குளிர்ந்த நீர் நல்லது என்கிறார்கள். மழை நீரில் நனைந்தால் சளிப் பிடிக்கும் என்பது தவறானது. ஜலதோஷம் வைரஸ் என்ற நச்சுக் கிருமியால் உண்டாகிறது. இது ஒரு தொற்றுநோய்.
எளிதில் அடுத்தவர்களுக்குப் பரவிவிடும். இந்த வைரஸ் கிருமி சுவாசப்பைகளில் ஏற்கெனவே இருக்கும். குளிரான காலநிலையில் ரத்தக் குழாய்கள் சுருங்குகின்றன, அப்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதனால் வைரஸ் கிருமி நோயை உண்டு பண்ணிவிடுகிறது. அதனால் மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிக்கும் என்று நினைக்கிறார்கள்.
எனக்கு அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் அதிகம். நான் விஞ்ஞானி ஆவதற்கு என்னை எவ்வாறு தயார் செய்துகொள்ள வேண்டும், டிங்கு?
–வெ. யுவன் ஆதித்தியா, 6-ம் வகுப்பு, செந்தில் மெட்ரிகுலேஷன் பள்ளி, தருமபுரி.
நீங்கள் விஞ்ஞானி ஆக வேண்டும் என்று நினைப்பதே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது யுவன் ஆதித்தியா! எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் உற்று நோக்க வேண்டும். ஆழமாகச் சிந்திக்க வேண்டும். நிறையப் படிக்க வேண்டும். ஒரு விஷயத்தை மேலும் மேலும் தெரிந்துகொள்வதற்கு ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். கடல் அளவு பொறுமை வேண்டும். சில நேரங்களில் கண்டுபிடிப்பு எதிர்பாராமல், விபத்தாக நிகழ்ந்துவிடலாம். சில நேரங்களில் ஒரு விஷயம் கண்டுபிடிக்கப்பட முடியாமலே போய்விடலாம்.
அதனால்தான் பொறுமை மிகவும் அவசியம். அடுத்து எளிதில் சோர்ந்து விடாமல் இருப்பதற்கு அதிக நம்பிக்கையும் வேண்டும். ஆயிரம் முறை தோல்வியடைந்ததைக் கூட, தாமஸ் ஆல்வா எடிசன், ‘நான் ஆயிரம் முறை இது சரி வராது என்று கற்றுக்கொண்டேன்’ என்று எவ்வளவு நேர்மறையாகக் கூறியிருக்கிறார்! அப்படித் தோல்விகளை எடுத்துக்கொள்ளும் மனம் வேண்டும். உலக மக்களின் நன்மைக்குப் பயன்படும் விதத்தில் உங்கள் கண்டுபிடிப்பு இருக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு, உங்களுக்கு இப்போதே என் வாழ்த்துகளைச் சொல்லிவிடுகிறேன், யுவன்.
ஓர் ஒளி ஆண்டு என்றால் என்ன, டிங்கு?
–கு. அய்யாசாமி, ஆவடி, சென்னை.
ஒளி ஓர் ஆண்டில் செல்லும் தூரத்தைக் குறிக்கும் வானியல் அலகுதான் ஒளி ஆண்டு. ஒளி ஒரு வினாடியில் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து செல்லக்கூடியது. ஓர் ஒளி ஆண்டு தூரம் என்பது சுமார் 9,46,000 கோடி கிலோமீட்டர் தூரம். நீங்கள் சூரியனிலிருந்து ஒளியைப் பிடித்துக்கொண்டு பூமிக்கு வந்தால் சுமார் 8 நிமிடங்கள் 20 நொடிகளில் வந்துவிடலாம், அய்யாசாமி!
THANKS TO THE HINDU NEWS PAPER
Reactions

Post a Comment

0 Comments