அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

உடல் எனும் இயந்திரம் - கழிவுத் தொழிற்சாலை

சி
றுநீரகம் வயிற்றில் உள்ள ஒரு வடிகட்டி! இரைப்பைக்குப் பின்புறம், முதுகெலும்பின் வலதுபுறம் ஒன்றும் இடதுபுறம் ஒன்றுமாக இரண்டு சிறுநீரகங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் அவரை விதை வடிவத்தில், சுமார் 150 கிராம் எடையில், 12 செ.மீ. நீளத்தில், 6 செ.மீ. அகலத்தில், 3 செ.மீ. தடிமனில் உள்ளது. வயிற்றின் வலது பக்கத்தில் கல்லீரல் இருப்பதால், வலது சிறுநீரகம் சற்றே கீழிறங்கி இருக்கிறது.
பாலூட்டும் உயிரினங்கள் பெரும்பாலானவற்றுக்குச் சிறுநீரகத்தின் அமைப்பு ஒன்றுபோலவே உள்ளது. எடையில் மட்டும்தான் வித்தியாசம். யானை சிறுநீரகத்தின் எடை சுமார் 3 கிலோ. நீலத்திமிங்கலத்தின் சிறுநீரகம் 225 கிலோவரை இருக்கும்.
சிறுநீரகத்தில் கார்டெக்ஸ், மெடுல்லா, பெல்விஸ் என மூன்று பகுதிகள் உள்ளன. சிறுநீரகத்தின் குவிந்த வெளிப்பகுதிக்கு கார்டெக்ஸ், நடுவில் உள்ளது மெடுல்லா. அதைத் தொடர்ந்து ‘பெல்விஸ்’ (Renal pelvis) எனும் குழிவான பகுதி உள்ளது. அதில் நிறைய குழாய்கள் திறக்கின்றன. அவற்றுக்கு ‘காலிசெஸ்’ (Calyces) என்று பெயர்.
சிறுநீரை உற்பத்தி செய்வது சிறுநீரகத்தின் முக்கியப் பணி. இதற்கு ‘நெஃப்ரான்கள்’ (Nephrons) உதவுகின்றன. இவைதான் சிறுநீரகத்தின் துப்புரவுப் பணியாளர்கள். இவை மெடுல்லாவில் உள்ள பிரமிட்களில் காணப்படுகின்றன. ஒவ்வொரு சிறுநீரகத்திலும் சுமார் 10 லட்சம் நெஃப்ரான்கள் இருக்கின்றன. ஏராளமான முடிச்சுகளுடன் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் இந்த நெஃப்ரான்கள் எல்லாவற்றையும் நேராக இழுத்து, இணைத்தால், சுமார் 60 கி.மீ. நீளமுள்ள தொலைபேசி வயர்போல் காணப்படும்.
ஒவ்வொரு நெஃப்ரானிலும் உள்ள தலைப்பகுதிக்கு ‘பௌமன் கிண்ணம்’ (Bowman’s capsule) என்று பெயர். சிறுநீரகத்துக்கு வரும் சுத்த ரத்தக் குழாயின் (Renal artery) கிளை ஒன்று (Afferent arteriole) இதற்குள் நுழைகிறது. அது கிளைவிட்டுக் கிளைவிட்டுச் சிறிதானதும் மறுபடியும் புதிய கிளைகளுடன் சேர்ந்து ஒரு பெரிய குழாயாக (Efferent arteriole) உருவமெடுத்து வெளியேறுகிறது. பின்னர் அது தந்துகிகளாகப் பிரிந்து, சிறுநீரகச் சிரையாக (Renal vein) உருமாறி, பொது ரத்த ஓட்டத்தில் இணைகிறது.
இந்தக் கிண்ணத்திலுள்ள ரத்தக்குழாய்ப் பின்னலுக்கு ’கிளாமிருலஸ்’ (Glomerulus) என்று பெயர். ‘பௌமன் கிண்ணம்’ மற்றும் ’கிளாமிருலஸ்’ இணந்துள்ள பகுதிக்கு ‘மல்பிஜியன் பாடி’ (Malpighian body) என்று பெயர். இதுதான் சிறுநீரகத்தின் உண்மையான வடிகட்டி.
ஒவ்வொரு பௌமன் கிண்ணத்திலிருந்தும் ஒரு சிறுநீரகச் சிறுகுழாய் (Renal tubule) கிளம்புகிறது. இதில் உறிஞ்சும் பகுதி, ஹென்லே லூப், சுரக்கும் பகுதி எனப் பல பகுதிகள் உண்டு. மலைப்பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளைப் போலத்தான் இந்த சிறுநீரகக் குழாய்களும் வளைந்து வளைந்து செல்லும். பல நெஃப்ரான்களின் சிறுநீரகச் சிறுகுழாய்கள் கடைசியில் ஒன்றுசேரும்போது ஒரு சேகரிப்புக் குழாய் (Collecting tubules) உருவாகும். இப்படிப் பல சேகரிப்புக் குழாய்கள் காலிசெஸ் பகுதிக்கு வந்து பெல்விஸில் திறக்கின்றன.
பெல்விஸில் இருந்து 25 செ.மீ. நீளத்தில் 3 மி.மீ. விட்டத்தில் ஒரு சிறுநீர்க் குழாய் (Ureter) புறப்படுகிறது. இவ்வாறு இரண்டு சிறுநீரகங்களிலிருந்தும் தலா ஒரு சிறுநீர்க் குழாய் புறப்பட்டு அடிவயிற்றில் இருக்கும் சிறுநீர்ப்பையை (Urinary bladder) அடைகிறது. சிறுநீர்ப்பை, சிறுநீர்த் துவாரம் உள்ள சிறுநீர்த் தாரையில் இணைந்துள்ளது.

சரி, சிறுநீர் பிரிவது எப்படி?

உடலில் ஓடும் ரத்தத்தில் நிமிடத்துக்கு ஒன்றேகால் லிட்டர் சிறுநீரகத்துக்குப் போகிறது. இதிலிருந்து நிமிடத்துக்கு 125 மி.லி. சிறுநீர் (GFR) ஆரம்பத்தில் பிரிக்கப்படுகிறது. இது அப்படியே சிறுநீராக வெளியேறுவதில்லை. நெஃப்ரான் செய்யும் முக்கிய வேலையே இனிமேல்தான் ஆரம்பமாகிறது.
இந்த வேலையை நகராட்சியில் ஏரித் தண்ணீரை ஒரு தொட்டியில் சேகரித்துப் பல கட்டங்களில் வடிகட்டி சுத்தப்படுத்துகிறார்களே, அதோடு ஒப்பிடலாம். ஒருநாளில் சுமார் 1,500 லிட்டர் ரத்தம் இவ்வாறு வடிகட்டப்பட்டுச் சுத்தமாகிறது.
ஆரம்பச் சிறுநீர் என்பது தரைத் தொட்டியில் சேகரிக்கப்பட்ட ஏரித் தண்ணீர்போல் நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கும். நல்லவை எல்லாம் சிறுநீரில் போய்விட்டால், அடுத்த ஐந்தாம் நிமிடத்தில் தலைசுற்றி மயங்கிவிடுவோம். இதைத் தடுப்பதற்காக அடுத்த வேலையை ஆரம்பிக்கிறது நெஃப்ரான். இதனுள் சிறுநீர் பயணிக்கும்போது, குளுக்கோஸ், சோடியம், பொட்டாசியம் போன்ற தேவையானவற்றை உறிஞ்சி உடலுக்கே திரும்பவும் தந்துவிடுகிறது. யூரியா, யூரிக் அமிலம் போன்ற கழிவுகளைத் தண்ணீருடன் கலந்து சிறுநீர்ப் பைக்கு அனுப்புகிறது. இதுதான் சிறுநீர்.
நெஃப்ரான்களின் வழியே ஆரம்பச் சிறுநீர் வரும்போது, உடலுக்குப் பயன்படும் சத்துகள் முழுவதும் மறுபடியும் உடலுக்குக் கிடைத்துவிடுவதால்தான், உடலில் அயனிகளின் அளவு சமச்சீராக இருக்கிறது; தண்ணீரின் அளவும் சரியாக இருக்கிறது. ரத்தம் உடலுக்குள் ஒரே அளவாகச் சுற்றிவருவதற்கும், ரத்த அழுத்தம் சரியாக இருப்பதற்கும் இந்தச் சமச்சீர் அளவுகள் முக்கியம்.
இரண்டு சிறுநீரகங்களும் சேர்ந்து நாளொன்றுக்கு ஒன்றரை லிட்டர் சிறுநீரை உற்பத்தி செய்கின்றன. இது சீறுநீர்ப்பையில் சேகரிக்கப்படுகிறது. இரண்டு சிறுநீரகங்களுக்கும் சேர்த்து ஒரு பைதான். இதில் சுமார் அரை லிட்டர் சிறுநீர் பிடிக்கும். எல்லா விலங்குகளுக்கும் சிறுநீர்ப்பை உண்டு. பறவைகளுக்கு மட்டும் இது இல்லை. யானையின் சிறுநீர்ப்பையில் அதிகபட்சமாக 18 லிட்டர் சிறுநீர் கொள்ளும். திமிங்கிலம் ஒரு நாளில் 300 லிட்டர் சிறுநீரை உற்பத்தி செய்கிறது.
(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர். 
தொடர்புக்கு: gganesan95@gmail.com
THANKS TO - THE HINDU
Reactions

Post a Comment

0 Comments