அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

உடல் எனும் இயந்திரம் - இரட்டைச் சுரப்பி

கல்லீரல் மாதிரியான மற்றொரு சுரப்பி, கணையம். இது, இரைப்பைக்கு நேர் கீழாக, வயிற்றின் இடதுபுறத்தில், வாழை இலை வடிவத்தில் குறுக்காகப் படுத்திருக்கிறது. 12 முதல் 15 செ.மீ. வரை நீளம் உடையது. இதன் எடை அதிகபட்சமாக 100 கிராம் இருக்கும். உடலில் கணையம் இருப்பதை முதன்முதலில் கண்டுபிடித்துச் சொன்னவர் ஹீரோபிளஸ் (Herophilus) எனும் கிரேக்க மருத்துவர்.
கணையம் தலை, உடல், வால், கழுத்து என நான்கு பகுதிகளைக் கொண்டது. இதன் ஊசி வால் வயிற்றின் இடதுபுறம் இருக்கிறது; அகன்ற தலை வலதுபுறம் சிறுகுடலுக்கு அருகில் இருக்கிறது. இரண்டுக்கும் இடையில் உடல் இருக்கிறது. தலையும் உடலும் சேருகிற பகுதிக்குக் கழுத்து என்று பெயர். தலையிலிருந்து கிளம்பும் கணைய நாளம், பித்தப்பையிலிருந்து வரும் பித்த நாளத்துடன் இணைந்து சிறுகுடலுடன் இணைகிறது.
கணையம் ஓர் இரட்டைச் சுரப்பி. இதைக் கலப்புச் சுரப்பி (Mixed gland) என்றும் கூறுவார்கள். செரிமானத்தை இயக்கும் ‘நாளமுள்ள சுரப்பி’யாகவும், ஹார்மோன்களைச் சுரக்கும் ‘நாளமில்லாச் சுரப்பி’யாகவும் இயங்குகிறது. ஏதாவது ஒரு நாளம் வழியாக உடலில் ஓரிடத்தில் சுரக்கப்படும் நீரானது, இன்னோர் இடத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்றால், அது நாளமுள்ளது.
நீர் சுரந்து ரத்தத்தில் நேரடியாகக் கலந்து விடுகிறது என்றால், அது நாளம் இல்லாதது. இந்த இரண்டு வகைச் சுரப்பிகளும் ஒருங்கே இணைந்துள்ள ஓர் ஆச்சர்ய உறுப்பு கணையம் மட்டுமே!
ஒரு தேனடையைப்போல் இருக்கிற கணையத்தின் ‘அசினார்’ செல்கள் செரிமான நீரைச் சுரக்கின்றன. அந்த நீர் கணைய நாளம் வழியாகச் சிறுகுடலை அடைகிறது. ஆழ்கடலின் நடுவே பனிப்பாறைகள் மிதக்கிற மாதிரி கணையத்தின் நடுநடுவே ‘லாங்கர்ஹான்ஸ் திட்டுகள்’ தெரிகின்றன. அவற்றில் ஆல்பா, பீட்டா, டெல்ட்டா எனும் செல்கள் இருக்கின்றன.
ஆல்பா செல்கள் குளுக்ககானையும், பீட்டா செல்கள் இன்சுலினையும், டெல்ட்டா செல்கள் சொமொஸ்டோடேடின் ஹார்மோனையும் சுரக்கின்றன. அந்தச் சுரப்புகள் நேரடியாக ரத்தத்தில் கலந்து விடுகின்றன.
கணையம், ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் செரிமான நீரைச் சுரக்கிறது. இதில் செரிமானத்துக்கு உதவும் என்சைம்களும் தாதுக்களும் ஏராளமாக உள்ளன. கணையம், என்சைம்களைச் சுரப்பதோடு நின்றுவிடுவதில்லை; மிகச் சிறந்த சென்சாராகவும் செயல்படுகிறது!
கணைய என்சைம்கள் அளவுக்கு அதிகமாகச் சுரந்தாலும் ஆபத்து; நிறைய நேரம் கணையத்தில் தேங்கினாலும் கெடுதல். எனவே, சாப்பிடும் உணவைப் பொறுத்து செரிமான நீரைச் சுரக்கிறது, கணையம். எவ்வளவு உணவு இரைப்பையில் இருந்து குடலுக்கு வருகிறது என்பதை மோப்பம் பிடித்து, அதற்குத் தேவையான என்சைம்களை ‘அளந்து’ அனுப்புகிறது. உணவு எப்போது சிறுகுடலுக்கு வருகிறதோ, அந்த நேரத்தில் கணையச் சுரப்பும் மிகச் சரியாக அங்கு வந்துவிடுகிறது. அவ்வளவு நேர்த்தி!
நீங்கள் சாப்பிடுவது இட்லி, தோசை என்றால், கணையம் அதை சென்சார் செய்து அமிலேஸ் என்சைமைச் சுரக்கும். பருப்புச் சோறு என்றால் டிரிப்சின் என்சைமையும், இறைச்சி என்றால் லைப்பேஸ் என்சைமையும் தேர்ந்தெடுத்துச் சுரக்கும். மாவுச்சத்து குளுக்கோஸாகவும், புரதச்சத்து அமினோ அமிலமாகவும், கொழுப்புச்சத்து கொழுப்பு அமிலமாகவும் கல்லீரலுக்குப் போகும். அங்கே அவை உடலுக்குத் தேவையான சக்தியாக மாறும்.
கணையமானது செரிமானச் சேவகன் மட்டுமல்ல; குடலைப் பாதுகாப்புக்கும் ஃபயர் சர்வீஸும்தான்! சாப்பிட்ட உணவில் அமிலத் தன்மை அதிகம் என்றால், பைகார்பனேட் அயனிகளை அள்ளிக்கொண்டு வந்து, அந்த அமிலத் தீயை அணைத்துவிடும். இதனால், சிறுகுடல் சுவர்கள் அழிவின் விளிம்பிலிருந்து தப்பித்துவிடும். கணையம் மட்டும் இந்த வேலையைச் செய்ய மறுத்தால், நீங்கள் குடிக்கும் நூறு மில்லி எலுமிச்சைச் சாறு மட்டுமே குடலில் பெரிய ஓட்டையைப் போட்டுவிடும்.
இன்சுலின் ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. குளுக்ககான், ரத்தத்தில் சர்க்கரை குறையும்போது, ஏற்கெனவே கல்லீரல் சேமித்துள்ள மாவுச்சத்து, கொழுப்புச்சத்து போன்றவற்றிலிருந்து குளுக்கோஸை எடுத்து வந்து ரத்தத்தில் சேர்க்கிறது.
இந்த இரண்டு ஹார்மோன்களும் ஒன்றுக்கு ஒன்று புரிந்து செயல்படுவதால், ரத்தச் சர்க்கரை சரியாக இருக்கிறது. ஏதாவது ஒரு காரணத்தால் கணையம் பாதிக்கப்படுகிறது என வைத்துக் கொள்வோம். அப்போது இந்தச் சீரான இயக்கம் தடுமாறுகிறது; நீரிழிவு ஏற்படுகிறது.
(இன்னும் அறிவோம்)கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com  THANKS TO THE HINDU NEWS PAPER
Reactions

Post a Comment

0 Comments