அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

SCIENCE DOSE : மரத்தின் உயரத்தை எப்படிக் கணக்கிடுவது?

ஆட்டு இறைச்சி சாப்பிட்டால் கொழுப்பு அதிகரிக்கும் என்கிறார்கள். ஆனால் அந்த ஆடு இலை தழைகளைத் தானே சாப்பிடுகிறது! அப்புறம் எப்படிக் கொழுப்பு ஆட்டின் உடலில் சேரும், டிங்கு?
– கு. லிபிவர்ஷ்னி, 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பள்ளி, சமயபுரம்.
நல்ல கேள்வி, லிபிவர்ஷ்னி! சாப்பிடும் உணவு எல்லாம் சர்க்கரையாக மாறும். பிறகு அந்தச் சர்க்கரையிலிருந்து உடலுக்குத் தேவையான சத்துகள் பிரிந்து செல்லும். உடலுக்குத் தேவையான சத்துகள் போக, மீதி இருக்கும் சத்துகள் கொழுப்பு, கார்போஹைட்ரேட் ஆக மாற்றம் அடைந்து உடலில் சேமிக்கப்படும். அதனால்தான் தாவரங்களை மட்டுமே சாப்பிடும் ஆட்டுக்கும் இறைச்சியை மட்டுமே சாப்பிடும் புலிக்கும் தாவரங்களையும் இறைச்சியையும் சாப்பிடும் மனிதர்களுக்கும் கொழுப்பு உடலில் இருக்கிறது. இப்படிக் கொழுப்பும் கார்போஹைட்ரேட்டும் அளவுக்கு அதிகமாக உடலில் சேரும்போது எடை அதிகரிக்கிறது.
எந்த மாதிரியான புத்தகங்களைப் படிக்க வேண்டும், டிங்கு?
பா. சத்யா, 8-ம் வகுப்பு, அரசினர் உயர்நிலைப் பள்ளி, விருதுநகர்.
பாடப் புத்தகங்கள் தவிர்த்து, பிற புத்தகங்கள் படிப்பது அவரவர் விருப்பம் சார்ந்தது, சத்யா. அறிவியல், வரலாறு, வாழ்க்கை, பயணம் போன்றவற்றைப் படித்து நம் அறிவை வளர்த்துக்கொள்ளலாம். நல்ல நாவல்கள், கதைகளைப் படித்து நம் ரசனையை மேம்படுத்திக்கொள்ளலாம். நாம் படிக்கும் புத்தகங்கள் அறிவுரை, நன்னெறி சொல்ல வேண்டிய அவசியமில்லை. படிக்கும்போது மகிழ்ச்சி தந்தால் போதுமானது. இப்படித்தான் புத்தகம் இருக்க வேண்டும் என்றோ, இப்படிப்பட்ட புத்தகங்களைத்தான் படிக்க வேண்டும் என்றோ எந்தவிதக் கட்டுப்பாடும் கிடையாது. நல்ல அறிவும் நல்ல ரசனையும் தரக்கூடிய புத்தகங்களாகத் தேர்ந்தெடுத்துப் படித்தால் போதும்.
ஒரு தம்ளர் அரிசியைப் பொங்கினால் ஒரு பானை சோறு வருவது எப்படி, டிங்கு?
– ம. அஜய்குமார், 6-ம் வகுப்பு, காவல்கிணறு, திருநெல்வேலி.
வெப்பத்தால் பொருட்கள் விரிவடையும் என்பது உங்களுக்கே தெரியும். அரிசியைக் கொதிக்கும் தண்ணீரில் போடும்போது, தண்ணீரை உள் இழுத்துக்கொள்கிறது. அரிசியில் இருக்கும் ஸ்டார்ச் மூலக்கூறுகள் வெப்பத்தால் விரிவடைந்து, ஒரு கட்டத்தில் அரிசியை உடைத்துக்கொண்டு வெளியேறுகின்றன. இதனால்தான் தண்ணீரில் மாவுச் சத்து கரைந்து, வெள்ளையாகக் காணப்படுகிறது. அரிசி வெப்பத்தால் விரிவடைந்து சோறாக மாறும்போது அளவு, பெரிதாக மாறிவிடுகிறது. அதனால்தான் ஒரு தம்ளர் அரிசி ஒரு பானை சோறாக மாறிவிடுகிறது, அஜய்குமார்.
மரத்தின் உயரத்தை எப்படிக் கணக்கிடுவது, டிங்கு?
எஸ். ராஜலஷ்மி, திருவாரூர்.
ஒரு ஸ்கேல் அல்லது குச்சியை எடுத்துக்கொள்ளுங்கள். மரத்தை விட்டுச் சற்று தூரத்தில் நின்றுகொள்ளுங்கள். ஒரு கண்ணை மூடிக்கொள்ளுங்கள். இன்னொரு கண்ணுக்கு அருகே ஸ்கேல் அல்லது குச்சியை உயர வாக்கில் பிடித்து, மரத்தைப் பாருங்கள். முழு மரமும் ஸ்கேல் உயரம் தெரியும்படி வைத்துக்கொள்ளுங்கள். படத்தில் காட்டியபடி a, b இருக்குமாறு ஸ்கேல் இருக்கிறதா என்று பாருங்கள். பிறகு பக்கவாட்டில் சாயுங்கள். அது c. அந்த இடத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பிறகு b-c இடையே இருக்கும் தூரத்தை அளந்தால் மரத்தின் உயரம் கிடைத்துவிடும், ராஜலஷ்மி.

நன்றி : தி இந்து நாளிதள்
Reactions

Post a Comment

0 Comments