அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

பொதுத் தேர்வில் புதிய சவால்கள்: மாணவர்கள் எதிர்கொள்ள தயாரா?

சென்னை: "தமிழகத்தில் பள்ளிகளுக்கான பாடத்திட்டம் மாணவர்களின் அறிவுத்திறனை சோதிப்பதாக இல்லை; வெறும் மனப்பாடக் கல்வியாக மட்டுமே இருக்கிறது. பொதுத் தேர்வுகளிலும் "ப்ளு பிரிண்ட்' அடிப்படையிலேயே வினாத்தாள்கள் வடிவமைக்கப்படுகின்றன. இதன் காரணமாக பாடம் சார்ந்து எழுப்பப்படும் சில மறைமுக வினாக்களுக்கு கூட மாணவர்களால் பதிலளிக்க முடிவதில்லை. இத்தகைய செயல்பாடுகளால் மாணவர்களிடையே ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்து ஆழமான புரிதல் ஏற்படுவதில்லை. எதைப் படிக்க வேண்டும் என்ற அடிப்படை விஷயத்திலேயே குழப்பம் ஏற்படுவதால் மத்திய அரசு நடத்தும் எந்தவொரு போட்டித் தேர்வுகளிலும் தமிழக மாணவர்கள் அதிகளவில் வெற்றி பெறுவதில்லை. எனவே, பள்ளி பாடத்திட்டத்திலும், வினாத்தாள் வடிவமைப்பிலும், கற்பித்தலிலும் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்'' இந்தக் கோரிக்கையை கல்வியாளர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் தொடர்ந்து பல ஆண்டுகளாக தமிழக பள்ளிக் கல்வித்துறையிடம் முன்வைத்தனர். மிகப் பெரிய மாற்றம்: அதற்கேற்றவாறு கல்வித்துறையில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தாலும் மாணவர்களின் கற்றல் அடைவுத் திறனிலும், மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளிலும் முன்பிருந்த நிலையே தொடர்ந்தது. இதை உற்றுக் கவனித்த பள்ளிக் கல்வித் துறை ஒரு மிகப் பெரிய மாற்றத்தைச் செய்ய தீர்மானித்தது. இனி செய்யப்படும் மாற்றம் அடுத்த பத்தாண்டுகளுக்கு நிலைத்திருக்க வேண்டும் என முடிவெடுத்து புதிய பாடத்திட்ட அறிவிப்பை கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்ததோடு வினாத்தாள் வடிவமைப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தியது. இதன் காரணமாக இந்த ஆண்டு (2018) நடந்து முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மொழிப்பாடம் உள்பட இயற்பியல், வேதியியல், பொருளியல், கணிதம் என முக்கியப் பாடங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு புதுமையான வினாக்கள் இடம்பெற்றிருந்தன. சிந்தித்துப் பதிலளிக்கக் கூடிய வகையிலும், ஏற்கெனவே கேட்கப்பட்ட கேள்வியே கூட மாறுபட்ட முறையில் கேட்கப்பட்டிருந்தன. ஆனால், புதிய மாற்றத்துக்கு பெரும்பாலான மாணவர்கள் கொஞ்சம் கூடத் தயாராகவில்லை என்பதை பொதுத்தேர்வு முடிவுகள் அப்பட்டமாக வெளிப்படுத்தின. பிளஸ் 2 உள்பட மூன்று பொதுத் தேர்வுகளிலும் 200-க்கு 200, 100-க்கு 100 பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும், சராசரி மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கையும் தலைகீழாக மாறியது; அதாவது வெகுவாகக் குறைந்தது. ஆனால், அது குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை; மனப்பாட கல்வி முறையைவிட, பாடம் குறித்த புரிதலே அவசியம் என கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், பிற துறைகளைப் போன்றே கல்வித் துறையிலும் மாற்றங்கள் தவிர்க்க முடியாது. அதுவும், பெரும் சவால்களை எதிர்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட பாடத்தில் புத்தகத்தின் பின்பகுதியில் இடம்பெற்ற கேள்விகள் மட்டுமல்ல; அதன் எந்தப் பகுதியில் இருந்து வினாக்கள் இடம்பெற்றாலும் என்னால் பதிலளிக்க முடியும்; அது மட்டுமல்ல பாடத்தோடு தொடர்புடைய விஷயங்கள் குறித்துக் கேட்டாலும் சரியான விடையை எழுத முடியும் என்ற நம்பிக்கை மாணவர்களிடத்தில் ஏற்பட வேண்டும். அதற்கு மாணவர்களும், ஆசிரியர்களும் தங்களது வழக்கமான செயல்பாடுகளிலிருந்து எப்படி மாறுபட வேண்டும் என ஆசிரியர்கள், கல்வியாளர்கள் சில வழிகாட்டுதலைத் தெரிவித்துள்ளனர். பிரின்ஸ் கஜேந்திரபாபு (கல்வியாளர்): சிறுகதைகள், நாவல், படக்கதைகளைப் போன்றே பாடநூல்களையும் முழுவதுமாக விரும்பிப் படிக்கும் பழக்கம் மாணவர்களிடையே ஏற்பட வேண்டும். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது அதில் சந்தேகம் ஏற்பட்டால் அதை உடனடியாக நிவர்த்தி செய்து கொள்வது அவசியம். ஏனெனில் முரண்பட்ட புரிதல் தவறான விடையை எழுத வழிவகுத்து விடும். பள்ளிகளில் அறிவியல், கணிதம் போன்ற பாடங்களுக்கு வாரந்தோறும் ஒரு முறை கருத்தரங்கம் ஏற்பாடு செய்து அதில் மாணவர்களைப் பேச வைப்பதன் மூலம் பாடநூல்களில் இடம்பெறாத வினாக்களையும், அதற்கான பதிலையும் வெளிப்படச் செய்யலாம். ஒரு பாடம் குறித்த தகவலை பள்ளியில் வழங்கப்பட்ட பாடநூலில் மட்டுமல்ல, அது தொடர்பான பிற நூல்களில் இருந்தும் பெறலாம் என்பதை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதற்கு அவர்களை தினந்தோறும் வீடுகளுக்கு அருகிலேயோ அல்லது பள்ளியில் உள்ள நூலகத்தையோ தவறாமல் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். தேர்வு உள்ளிட்ட எத்தகைய சவால்களையும் திறம்பட எதிர்கொள்ள, பொது அறிவு அவசியம். அதைத் தெரிந்து கொள்ள செய்தித்தாள்களை தினமும் வாசிக்க வேண்டும். செல்லிடப்பேசி, கணினித் திரையில் படிப்பது திருப்தியாக இருக்காது. ஏனெனில் பாட நூல்களையும், செய்தித்தாள்களையும் நேரடியாகப் படிப்பது தாயின் மடியில் அமர்ந்து உண்பதைப் போன்றது. மாறாக இணையத்தில் படிப்பது நாற்காலியில் அமர்ந்து சாப்பிடுவதுபோன்றது. எது சிறந்தது என மாணவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக வகுப்பறையில் ஆசிரியர்கள்-மாணவர்கள் உரையாடல் கல்வி இருக்க வேண்டும். இவையனைத்தும் சாத்தியப்படுமானால் பொதுத்தேர்வுகள் மட்டுமல்ல, கடினமான போட்டித்தேர்வு வினாத்தாள்களும் கற்கண்டாகும் என்றார். ஆர்.பிரபுதாஸ், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர், சென்னை: தேர்வை மட்டுமே இலக்காக நிர்ணயித்துப் படிக்கும் பழக்கத்தை மாணவர்களும், அதற்காக மட்டுமே அவர்களை பயிற்றுவிப்பதை ஆசிரியர்களும் கைவிட வேண்டும். குறிப்பாக இந்தப் பாடத்தில் இதுதான் முக்கியமான கேள்வி-இதைப் படித்தால் போதும் என்று மாணவர்களுக்கு இருக்கும் மனநிலையில் மாற்றம் ஏற்படுவது அவசியம். ஒரு பாடத்தைப் படிக்கும் போது, அதில் கூறப்பட்டுள்ள விஷயங்களை நமது வாழ்க்கையோடு தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். புவிஈர்ப்பு விசை என்றால் என்ன, மின்விசிறி எப்படிச் சுழல்கிறது, வங்கியின் செயல்பாடுகள் எப்படி இருக்கும், தென்மேற்குப் பருவமழை போன்றவை குறித்து பாடநூலில் உள்ள தகவல்களை அன்றாடச் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டு பாடம் நடத்த வேண்டும். அப்போதுதான் அது குறித்த புரிதல் மாணவர்கள் மனதில் எப்போதும் தங்கும். அதன் மூலம் எந்தப் பாடப் பொருள் குறித்து வினாத்தாளில் எப்படி சுற்றி வளைத்துக் கேள்வியெழுப்பினாலும் குழப்பமடையாமல் பதிலளிக்க முடியும். மாணவர்களைச் சிந்திக்க வைக்க வகுப்பறையில் உள்ள கரும்பலகை மட்டும் போதாது. மாறாக, வகுப்பறைகளை ஒரு சிறு ஆய்வுக்கூடமாக்க வேண்டும். அதில் கணிதம், வணிகவியல், அறிவியல் என எந்தப் பாடமாக இருந்தாலும் அதில் உள்ள முக்கியக் கோட்பாடுகள் குறித்த வரைபடங்கள், கருவிகள் போன்றவற்றை இடம்பெறச் செய்ய வேண்டும். வரலாறு, சமூக அறிவியல், கணிதம், தாவரவியல் என முக்கியப் பாடங்கள் குறித்து தகவல் சேகரிப்பு, புள்ளி விவரக் கணக்கெடுப்பு போன்றவற்றை நடத்தி திட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்க அறிவுறுத்த வேண்டும். இதை அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் பின்பற்றலாம். தேர்வுகளில் குறிப்பு வரைக, நெடுவினா போன்ற கேள்விகளுக்கு பொருத்தமான பதிலை அளிக்க வேண்டுமே தவிர அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரியானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை ஆசிரியர்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும். பி.நடராஜன், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர்: ஒரு மாணவனுக்கு "ஒரு வினாத்தாள் எப்படி இருந்தாலும் என்னால் அதில் முழு மதிப்பெண்ணைப் பெற முடியும் என்ற மன உறுதி இருக்க வேண்டுமானால் அவர்களுக்கு படைப்பாற்றல், படித்தல், ஆராய்தல், செய்முறைப்படுத்தல் போன்ற பன்முகத்தன்மை இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பிளஸ் 2 வகுப்புகளின் பொதுத்தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் ஆசிரியர்களுக்கு பாடங்கள் தொடர்பாகவும், பொதுத் தகவல்களை உள்ளடக்கியதாகவும் போதுமான பயிற்சிகள் ஆண்டுக்கு மூன்று முறை அரசின் சார்பில் வழங்கப்பட வேண்டும். அரசு பொதுத் தேர்வுகளை மாணவர்கள் அச்சமின்றி எதிர்கொள்ளும் வகையிலும் அந்தத் தேர்வுகளை தெளிந்த மனதோடு அணுகவும் மேல்நிலைப் பள்ளிகளில் அரசின் உத்தரவுப்படி உளவியல் ஆசிரியர் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். அனைத்து உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளிலும் வழக்கமான பாடங்கள் தொடர்பாக குறிப்பெடுக்கவும், போட்டித் தேர்வுகளுக்கான தகவல்களை அறிந்து கொள்ளவும் வசதியாக தேவையான நூல்கள் அரசின் சார்பில் வழங்கப்பட வேண்டும். மேலும் அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர்களின் அறிவுத் திறனைச் சோதிக்கும் வகையில், கணிதம், அறிவியல், பொது அறிவு சார்ந்த போட்டிகள் அடிக்கடி நடத்தப்பட்டு மாணவர்களின் திறனை மேம்படுத்த வேண்டும். -அ.ஜெயச்சந்திரன்
Reactions

Post a Comment

0 Comments