அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

SCIENCE DOSE : கானல் நீர் எப்படி உருவாகிறது?

வெயில் காலத்தில் கானல் நீர் சாலைகளில் தெரிகிறது. இது எவ்வாறு உருவாகிறது, டிங்கு?
–ந. சீனிவாசன், 9-ம் வகுப்பு, புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்.
கடுமையான கோடைக் காலத்தில் தார் சாலைகளிலும் பாலைவனங்களிலும் கானல் நீரைப் பார்க்க முடியும். தண்ணீர்தான் இருக்கிறது என்று அருகில் சென்றால், இன்னும் சற்றுத் தொலைவில் கானல் நீர் தெரியும். இது ஒரு மாயத் தோற்றம். நிலத்தில் இருந்து அதிகமான வெப்பம் மேலே வருகிறது. மேலே இருக்கும் காற்று சற்றுக் குளிர்ச்சியாகக் கீழ் நோக்கி வருகிறது. இவை இரண்டையும் ஊடுருவிக்கொண்டு சூரிய ஒளிக்கதிர்கள், வெப்பத்திலும் குளிர்ச்சியிலும் வெவ்வேறு வேகத்தில் நுழைகின்றன. அப்போது ஒளிக்கதிர்கள் வளைகின்றன. இதை நம் மூளை நிலத்திலிருந்து தண்ணீர் தோன்றுவதுபோல் எண்ணிக்கொள்கிறது, சீனிவாசன்.













பவுர்ணமி அன்றுதான் சந்திர கிரகணம் ஏற்படும் என்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு பவுர்ணமிக்கும் சந்திர கிரகணம் வருவதில்லையே ஏன், டிங்கு?
– ந. ஷ்ருதி, 8-ம் வகுப்பு, திருச்சி.
நீங்கள் சொல்வதுபோல் சந்திர கிரகணம் பவுர்ணமி அன்றுதான் ஏற்படும். ஆனால் சந்திரன், பூமி, சூரியன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போதுதான் சந்திர கிரகணம் ஏற்படும். இப்படி ஒரே நேர்க்கோட்டில் மூன்றும் வரும்போது, சூரியனின் கதிர்களை நடுவில் இருக்கும் பூமி மறைத்துவிடுவதால், சந்திரன் மீது வெளிச்சம் விழுவதில்லை. இதனால்தான் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. மூன்றும் ஒரே நேர்கோட்டில் எப்போதாவது தான் வரும் என்பதால் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சந்திர கிரகணம் ஏற்படுவதில்லை, ஷ்ருதி.
விஷத் தவளைகள் இருப்பதாகச் சொல்கிறான் என் நண்பன். அது உண்மையா? நம் நாட்டில் உண்டா, டிங்கு?
சி. ஸ்டீபன் பால், திருவள்ளூர்.
விஷத் தவளைகள் இருப்பது உண்மைதான். ஆனால் அவை நம் நாட்டில் இல்லை, ஸ்டீபன். தென் அமெரிக்காவிலும் மத்திய அமெரிக்காவிலும் உள்ள மழைக்காடுகளில் மட்டுமே விஷத் தவளைகள் (Poison dart frog) வசிக்கின்றன. கண்கவர் வண்ணங்களுடன் அழகாகக் காட்சியளிக்கின்றன. நீலம், பச்சை, மஞ்சள் போன்ற வண்ணங்களில் கறுப்புப் புள்ளிகள் காணப்படுகின்றன. மிகவும் சிறியவை. எதிரியைக் கண்டதும் முதுகில் இருந்து விஷத்தைச் சுரக்கின்றன. இது கடுமையான விஷம் என்பதால் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை. என்னிடம் விஷம் இருக்கிறது, எச்சரிக்கையாக இருங்கள் என்று தெரிவிக்கவே இந்தத் தவளைகளுக்கு கண்கவர் நிறங்கள். 220 வகை விஷத் தவளைகள் இருக்கின்றன.
Reactions

Post a Comment

0 Comments