அனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Monday, August 6, 2018

உடல் எனும் இயந்திரம் : தசைகளுக்கு நினைவாற்றல் உண்டா?

உடலுக்கு உருவம் கொடுப்பதற்கு எலும்புகளும் அவற்றோடு இணைந்த தசைகளும் உதவுகின்றன. மனித உடலில் 600-க்கும் மேற்பட்ட தசைகள் இருக்கின்றன. ஒரு தசையை எலும்போடு இணைப்பதற்குத் தசைநாண் (Tendon), பிணையம் (Ligament), திசுப்பட்டை (Aponeurosis), மசகுப்பை (Bursa), மூட்டுப்படலம் (Synovial sheath) ஆகியவையும் உள்ளன. எலும்பு தவிர, தசையோடு இணைந்துள்ள இவை அனைத்தும் சேர்ந்ததுதான், ‘தசை மண்டலம்’ (Muscular system).
தசைகளில் சட்டகத் தசை (Skeletal muscle), மென் தசை (Smooth muscle), இதயத் தசை (Cardiac muscle) என மூன்று வகை உண்டு. எலும்போடு இணைந்து அசைவுகளுக்கு உதவும் தசைகள், சட்டகத் தசைகள். உதாரணம், கை, கால், கழுத்து, வயிறு, முதுகுத் தசைகள். எலும்போடு இணையாத தசைகள், மென் தசைகள். உதாரணம், குடல் தசைகள், ரத்தக்குழாய் தசைகள்.
இதயத் தசை இதயத்தில் மட்டுமே உள்ளது. இது நம் ‘உயிர் காக்கும் தசை’. உடலில் உயிர் இருக்கும்வரை ஓய்வில்லாமல் இயங்கும் தனித்தன்மையுள்ள ஒரே தசை இது மட்டுமே. இதற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. இதயம் துடிப்பதற்குத் தேவையான மின்சாரத்தைத் தயாரித்துக் கொடுப்பதும் இதுதான்! உடலில் வேறு எந்தத் தசையிலும் மின்சாரம் தயாராவதில்லை.
தசைகள் இயங்கும் முறையைப் பொறுத்து இயக்குத் தசைகள் (Voluntary muscle), இயங்குத் தசைகள் (Involuntary muscle) எனவும் பிரிக்கின்றனர். முதலாவதை நம் விருப்பத்துக்கு இயக்க முடியும். சட்டகத் தசைகள் எல்லாமே இயக்குத் தசைகள்தான். நடக்க விரும்பினால் நடக்கவும், உட்கார விரும்பினால் உட்காரவும் இவற்றை நம்மால் இயக்க இயலும். ஆனால், மென் தசைகளும் இதயத் தசைகளும் அப்படி இல்லை; இவை நம் விருப்பத்துக்குக் கட்டுப்படாதவை; மூளையின் கட்டளைப்படி இயங்குபவை. இதனால் இவை இரண்டும் இயங்கு தசைகள்.
சட்டகத் தசை ஒவ்வொன்றிலும் தொடக்க முனை (Origin), செருகு முனை (Insertion), தசைத் திரள் (Muscle belly) என மூன்று பகுதிகள் உண்டு. பெரும்பாலான தசைகள் எலும்பு மூட்டுகளில்தான் இணைகின்றன. ஓர் எலும்பு அசையும்போது, அங்குள்ள தசையின் செருகு முனைதான் அசையும்; தொடக்க முனை அசையாது.
உடல் எடையில் 40% தசைகளின் எடை. உடலிலேயே மிக நீண்ட தசை ‘தொடை மடக்குத் தசை’ (Sartorius). இது இடுப்பிலிருந்து முழங்காலுக்கு வருகிறது. காதில் உள்ள ‘ஸ்டெபிடியஸ்’ (Stapedius) தசை உடலிலேயே மிகச் சிறியது. உடலில் மிக அதிகம் பலம் கொண்ட தசை தாடையில் உள்ள மெல்லுதசை (Masseter). ‘பிட்டப் பெருந்தசை’ (Gluteus maximus) உடலிலேயே மிகப் பெரியது; ‘பக்க முதுகுத் தசை’ (Latissimus dorsi ) மிக அகன்றது. சட்டகத் தசைகளில் பெரும்பாலானவை எலும்பில் இரு முனைகளில் இணையும். விதிவிலக்காக, நாக்குத் தசைகள் மட்டும் ‘ஹயாட்’ எலும்பின் (Hyoid bone) ஒரு முனையில்தான் இணைகின்றன.
சரி, தசைகளின் வேலை என்ன?
நிற்பதற்கு, நடப்பதற்கு, குனிவதற்கு, ஓடுவதற்கு, ஆடுவதற்கு, தூக்குவதற்கு எனப் பலதரப்பட்ட அசைவுகளுக்கும், உடல் அமைப்புக்கும் தசைகள் உதவுகின்றன. தசைகளால்தான் இடம்பெயர்தல் நமக்குச் சாத்தியமாகிறது. இவை எலும்புகளையும் உள்ளுறுப்புகளையும் பாதுகாக்கின்றன; இதயத் துடிப்பு, ரத்தச் சுற்றோட்டம், செரிமானம், குழந்தை பிறப்பு போன்றவற்றுக்கு ஆதாரமாகத் திகழ்கின்றன; ஐம்புலன்களுக்கும் பயன்படுகின்றன; உடலில் வெப்பத்தை உண்டாக்குகின்றன; உடலிலிருந்து கழிவுவை வெளியேற்றவும் உதவுகின்றன.
தனி ஒரு தசையால் எந்த ஓர் அசைவையும் செயல்படுத்த முடியாது. உதாரணமாக, கோபம், சோகம், புன்னகை, சிரிப்பு, வியப்பு என 12 வகையான பாவனைகளை முகம் காட்டுகிறது. புன்னகை புரிய 13லிருந்து 17 தசைகளும், கோபத்துக்கு 43 தசைகளும் இயங்குகின்றன. அதுபோல் உணவை மெல்வதற்கு 4 முதன்மைத் தசைகளும் 7 துணைத் தசைகளும் உதவுகின்றன. இப்படி ஒவ்வொரு உடல் அசைவுக்கும் பல தசைகள் இணைந்து செயல்படுகின்றன.
தசை எப்படி இயங்குகிறது?
தசை ஒவ்வொன்றும் பல தசை இழைகளால் (Muscle fibres) உருவாகிறது. ஓர் இழையின் நீளம் 3 - 5 செ.மீ. இது ஒரு தசையிழைப் படலத்தால் (Sarcolemma) போர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தசை இழையிலும் ‘தசை இழைக்கூழ்’ (Sarcoplasm) உள்ளது. அதில் 4 – 20 தசை ‘நுண்ணிழைகள்’ (Myofibrils) உள்ளன. இதில் நிறைய ‘இயங்கு இழைகள்’ (Sarcomere) இருக்கின்றன. அவற்றில் ஆக்டின் (Actin), மயோசின் (Myosin) எனும் புரதங்கள் உள்ளன. இவைதான் தசை இயக்கத்துக்கு உதவுகின்றன.
மூளையிலிருந்து வருகிற மத்திய நரம்பின் முனைகள் தசைகளில் புதைந்திருக்கின்றன. இந்த முனைகள் தசைகளுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதில்லை. தசைக்கும் நரம்பு முனைக்கும் நடுவில் சிறிய இடைவெளி இருக்கிறது. இது ‘நரம்புச் சந்தி’ (Synapse). மூளையிலிருந்து தசை இயக்கத்துக்கு ‘இயக்கு நரம்பு’ (Motor nerve) மூலம் கட்டளை வருகிறது.
அப்போது நரம்புச் சந்தியில் ‘அசிட்டைல்கோலின்’ (Acetylcholine) எனும் நரம்புக் கடத்தி சுரக்கிறது. இது தசை முழுவதும் பரவி, அங்குள்ள ஆக்டினையும் மயோசினையும் தூண்டி தசை இயக்கத்தைச் செயல்படுத்துகிறது. இப்படியான இயக்கத்தின்போது ஒருபுறம் தசை சுருங்கும்; எதிர்ப்புறத்தில் உள்ள தசை விரியும். உதாரணமாக, கையை மடக்க வேண்டுமானால், கையின் முன் தசைகள் சுருங்கும்; பின் தசைகள் விரியும்.
ஒன்று தெரியுமா? மூளைக்கு மட்டும்தான் நினைவாற்றல் உண்டு என்றில்லை. தசைகளுக்கும் அது உண்டு. தொடர்ச்சியாகத் தசைகளுக்குப் பயிற்சி கொடுத்தால், அவற்றைத் தசைகள் நினைவில் கொண்டு, அந்த இயக்கங்களை விரைவாகச் செய்து முடிக்கும். விளையாட்டில் பயிற்சி பெற்ற வீரர்கள்தான் பதக்கங்களை வெல்கிறார்கள். அதற்குக் காரணம் தசைகளின் இந்த நினைவாற்றல்தான்! மேலும், தொடர்ச்சியான உடற்பயிற்சிகள் உடல் நலனையும் காக்கும்.
(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்வி அமுது