அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

SCIENCE DOSE : உடல் எனும் இயந்திரம் : ருசி தெரிவது எப்படி?

கண்களை மூடிக்கொண்டால்கூட, கையில் ஓரிடத்தில் தொட்டால், அந்தத் தொடு உணர்ச்சியைப் புரிந்துகொண்டு, எந்த இடத்தில் தொடப்பட்டது என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது. உணவின் ருசியை உணர முடிகிறது. அதுபோல் காலில் முள் குத்தினால், காலை விருட்டென்று இழுத்துக்கொள்கிறோம். கையில் தீ சுட்டால் கையை வேகமாக விலக்கிக்கொள்கிறோம். இவை எல்லாம் எப்படிச் சாத்தியமாகின்றன?
தொடுதல், ருசி போன்ற சாதாரண தகவல்களும், குத்துதல், சுடுதல் போன்ற அவசரத் தகவல்களும் தண்டுவடத்துக்கும் மூளைக்கும் செல்வதாலும், அங்கிருந்து தகவல்கள் மீண்டும் உடலின் பல பாகங்களுக்கும் வருவதாலும்தான் சாத்தியமாகின்றன. இப்படியான தகவல்கள் உடலுக்குள் நரம்புகள் வழியாகவே சென்றுவருகின்றன.
தொடுதல், கிள்ளுதல் போன்ற புறத்தூண்டல்களுக்கு, பசி, ருசி போன்ற அகத்தூண்டல்களுக்கு வினைபுரியும் ஆற்றலும், அவற்றைக் கடத்தும் திறனும் நரம்புகளுக்கு இருப்பதால்தான் உடலில் தகவல் பரிமாற்றம் இயல்பாக நிகழ்கிறது. அதே வேளையில் இந்தத் தூண்டல்களுக்குத் தொடர்ச்சியாக வினைபுரியாமல், அடுத்தடுத்தத் தூண்டல்களுக்கு நடுவில் நரம்புகள் சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொள்வதால், அவை சோர்வடையாமல் இயங்குவதும் சாத்தியமாகிறது.
இப்படித் தகவல் பறிமாற்றத்துக்கு உதவும் நரம்புகளில் உணர்வு நரம்புகள் (Sensory nerves), இயக்க நரம்புகள் (Motor nerves) என இரண்டு வகை உண்டு. உணர்வு நரம்புகள் உடலில் ஓரிடத்தில் உருவாகும் தகவல்களை மூளைக்குக் கொண்டு செல்கின்றன. இயக்க நரம்புகள் மூளையில் ஏற்படும் தகவல்களை உடலுக்குக் கொண்டு வருகின்றன. இதேபோல் உணர்வுகளைப் பெற்று, உணர்வு நரம்புகளுக்குத் தருவதற்கு உணர்வு அணுக்கள் (Sensory neurons) இருக்கின்றன. உடலுறுப்புகளை இயக்குவதற்கான தகவல்களை இயக்க நரம்புகளிடமிருந்து பெறுதற்கு இயக்க அணுக்கள் (Motor neurons) இருக்கின்றன.
இந்த அமைப்புகள் பல விதமாகத் தகவல்களைப் பரிமாறுகின்றன. உதாரணமாக, உணவு சாப்பிடுதலும், முள் குத்துதலும் நம்மைப் பொறுத்தவரை இரண்டு செயல்பாடுகள். ஆனால், அவற்றின் இயக்கத்துக்கு உடலில் தகவல் பரிமாறப்படும் தடங்கள் வெவ்வேறானவை.
எப்படி?
ருசியை உணரும் உணர்வு அணுக்கள் நாக்கில் சுவை மொட்டுகளில் இருக்கின்றன. இவை ருசியை உணர்ந்து அதை ஒரு தகவலாக உணர்வு நரம்புகளுக்குக் கடத்துகின்றன. அவை ருசி உணர்வுக்கான மூன்றுவித கபால நரம்புகள் வழியாக அதை மூளைக்கு எடுத்துச் செல்கி்ன்றன. மூளை அந்த ருசியை உணர்ந்து சொல்கிறது. அது நமக்குப் பிடித்த ருசியாக இருந்தால், இன்னும் அதிகம் சாப்பிடத் தோன்றுகிறது.
உடனே அந்தத் தகவல் மூளையிலிருந்து இயக்க நரம்புகள் வழியாக உமிழ்நீர்ச் சுரப்பிகளுக்கு வருகிறது. அதன் பலனாக உமிழ்நீர் அதிகம் சுரக்கிறது. நாம் விரும்பும் உணவை இன்னும் அதிகமாகச் சாப்பிடுகிறோம். இந்தச் செயல் இயல்பாக நாம் உணர்ந்தும் அறிந்தும் செய்வது. இதற்கான நரம்புப் பாதை இப்படி இருக்கிறது: ‘நாக்கு சுவை மொட்டுகள் - சுவை உணர்வு அணு – உணர்வு நரம்பு - கபால நரம்புகள் - மூளை - இயக்க நரம்பு - இயக்க அணு - உமிழ்நீர்ச் சுரப்பி இயக்கம்’. இதற்கான தகவல் மையம், மூளை.
இதுபோல் உடலில் ஏற்படும் அசைவுகள், எழுதுதல், படித்தல் போன்றவற்றின் உணர்வுகள் தண்டுவடத்தின் வழியாக மூளை வரை சென்று பதிலைப் பெற்றுத் திரும்பும். இதில் பயணம் செய்யும் தகவல் சாதாரணமானதால், அதன் வேகமும் சாதாரணமாகவே இருக்கிறது.
அதேநேரம் ஒரு முள் நம் காலில் குத்துகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தத் தகவல் அதிவேகத்தில் செல்லும். ஏனெனில், இது ஓர் அவசரத் தகவல். இந்தப் பாதை ஒரு தனிப் பாதை. முள் குத்தும் தகவலை காலில் உள்ள உணர்வு அணுக்கள் பெற்று உணர்வு நரம்புகளுக்கு அனுப்புகின்றன. அவை தண்டுவட நரம்புகள் வழியாக, அதைத் தண்டுவடத்துக்கு எடுத்துச் செல்கின்றன.
ஆனால், இது மூளைக்கு எடுத்துச் செல்லப்படுவதில்லை. காரணம், தகவல் தண்டுவடத்துக்கு வந்து சேர்ந்ததும், ‘இது மூளைவரைக்கும் சென்றால் பதில் கிடைக்கத் தாமதமாகிவிடும்!’ என்று தண்டுவடம் நினைத்து, மூளை எடுக்க வேண்டிய முடிவைத் தானே எடுத்து, ‘காலை இழுத்துக்கொள்ளுங்கள்’ என்று கால் தசைகளுக்குத் தகவலை அனுப்புகிறது. இது இயக்க நரம்புகள் வழியாகக் கால் தசைகளின் இயக்க அணுக்களுக்குச் செல்கிறது. இயக்க அணுக்கள் கால் தசையை அசைக்கச் செய்கின்றன. உடனே நாம் காலை இழுத்துக்கொள்கிறோம்.
இப்படி ஒரு தகவல் மூளைக்குச் செல்லாமல், தண்டுவடத்துக்குச் சென்றதும் திரும்புகிறது என்றால், அந்த நரம்புப் பாதைக்கு ‘அனிச்சை வளைவு’ (Reflex Arc) என்று பெயர். ‘தசை உணர்ச்சி - உணர்வு அணு - உணர்வு நரம்பு - தண்டுவட நரம்பு - தண்டுவடம் - இயக்க நரம்பு - இயக்க அணு - தசை இயக்கம்’ என்று செல்லும் சிறப்புப் பாதை இது. இதற்குரிய தகவல் மையம், தண்டுவடம்.
முள் குத்தியவுடன் நாம் காலை எடுக்க வேண்டும் என்று யோசிப்பதற்கு முன்பாகவே, தண்டுவடம் தன்னிச்சையாக அவசர முடிவெடுத்து, தன்னாலேயே காலை எடுக்க வைப்பதால், இந்தச் செயலுக்கு ‘அனிச்சைச் செயல்’ (Reflex action) என்று பெயர்.
நரம்பு எப்படித் தகவலைக் கடத்துகிறது?
‘மூளையிலிருந்து காலை அசைக்க வேண்டும்’ என்று ஒரு தகவல் காலுக்கு வருகிறது என வைத்துக்கொள்வோம். அப்போது இயக்க நரம்பணுக்களில் ஏற்படும் சோடியம், பொட்டாசியம் அயனிகளின் பரிமாற்றத்தால் மின்சக்தி உற்பத்தியாகிறது. மின்வேதி மாற்றங்களால் நிகழும் இந்த விளைவுக்குச் ‘செயலூட்டத் திறன்’ (Action potential) என்று பெயர்.
பொத்தானைத் தட்டியதும், மின்கம்பியில் மின்சாரம் பயணித்து மின்விளக்கு எரிவதுபோல் நரம்பிழைகளில் இந்தத் திறன் ஒரு தகவலாகக் கடத்தப்படுகிறது. அது கால் தசைக்குச் சென்றதும் அசிட்டைல்கோலின் எனும் நரம்புக் கடத்தியின் உதவியுடன் அங்குள்ள புரதங்களைத் தூண்டி தசை இயக்கத்தைச் செயல்படுத்துகிறது. அப்போது நம்மால் காலை அசைக்க முடிகிறது.
நரம்புறையால் (Myelination) மூடப்பட்டிருக்கும் நரம்பிழைகளில் தகவல்கள் மிக வேகமாக செல்லும். எனவே மீன், முட்டை, இறைச்சி, பால், வாழைப்பழம், வால்நட், காலிபிளவர், கீரை, போன்ற உணவுகளைச் சாப்பிட்டால் நரம்புகள் நலம் பெறும்.
(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com
Reactions

Post a Comment

0 Comments