அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

டிங்குவிடம் கேளுங்கள்: உருகும் கடிகாரத்தை வரைந்தவர் யார்?

நத்தைக்குக் கால்கள் உண்டா, டிங்கு?
- ர. சந்துரு, 5-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சுல்தான்பேட்டை, திருப்பூர்.
நத்தைக்குக் கால்கள் கிடையாது, சந்துரு. மிக நீளமான, தட்டையான பாதம் மட்டுமே இருக்கிறது. இந்தப் பாதத்திலிருந்து ஒருவித நீர் (Mucus) சுரக்கிறது. இதனால் நத்தையால் எளிதாக நகர முடிகிறது.
ஆங்கிலம் அவசியம் தெரிய வேண்டுமா? ஆங்கிலம் தெரிந்தால்தான் சாதிக்க முடியுமா, டிங்கு?
- மு. அசுபதி, 7-ம் வகுப்பு,
திரு இருதய மேல்நிலைப் பள்ளி, காவல் கிணறு, திருநெல்வேலி.
இந்தக் காலத்தில் ஆங்கிலம் என்பது அவசியமான உலக மொழியாகிவிட்டது. அதனால் தாய்மொழி தவிர, ஆங்கிலத்தையும் கற்றுக்கொள்வது நல்லது. படிக்கும் வயதில் பல மொழிகளைக் கற்றுக்கொள்ளும் திறன் அதிகம் இருக்கும். அவசியம் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் ஆங்கிலம் தெரிந்தால்தான் சாதிக்க முடியுமா என்றால், இல்லை என்றுதான் சொல்ல முடியும். கடந்த வாரம் கணிதத்தின் நோபல் என்று அழைக்கப்படும் ‘ஃபீல்ட்ஸ் மெடல்’ நான்கு பேருக்கு வழங்கப்பட்டது.
காச்சர் பிர்கர் நீங்கா
இதில் ஈரானைச் சேர்ந்த காச்சர் பிர்கரும் ஒருவர். இவர் பட்டப்படிப்புவரை ஈரானில் படித்தார். 2000-ம் ஆண்டு பல்கலைக்கழங்களுக்கு இடையே நடந்த சர்வதேச கணிதப் போட்டியில் மூன்றாம் பரிசைப் பெற்றார். பிறகு இவரது குடும்பம் அகதியாக இங்கிலாந்தில் குடியேறியது. அங்கே பிஹெச்டி படிப்பை மேற்கொள்ளும்போதுதான் கொஞ்சம் ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்.
2003-ம் ஆண்டு லண்டன் கணிதவியல் சொசைட்டி, மிகவும் தகுதி வாய்ந்த மாணவர் என்ற விருதை வழங்கியது. இந்த ஆண்டு ஃபீல்ட்ஸ் மெடல் வழங்கப்பட்ட நால்வரில் ஒருவராக பிர்கர் இருக்கிறார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றுகிறார். இவரது சாதனைக்கு ஆங்கிலம் அவசியம் இல்லை என்றாலும், இவர் பேராசிரியராகப் பணியாற்றுவதற்கு ஆங்கிலம் அவசியம் தேவைப்படுகிறது அல்லவா, அசுபதி.
மின்மினிப் பூச்சிகள் ஒளிர்வது எப்படி, டிங்கு?                   
– வி. திவ்யதரிஷினி, 5-ம் வகுப்பு, ஸ்ரீ செளடாம்பிகா நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
மின்மினி வயிற்றின் பின்பகுதியில் ஒளிரக்கூடிய உறுப்பு இருக்கிறது. ரசாயன மாற்றத்தால் உயிர் ஒளிர்வு (Bioluminscence) நடைபெறுகிறது. லூசிஃபெரேஸ் என்ற நொதி, லூசிஃபெரினாக மாற்றம் அடைந்து, மாக்னீசியம் அயனிகள், அடினோசின் ட்ரைபாஸ்பேட், ஆக்ஸிஜனுடன் சேர்ந்து ஒளியை உருவாக்குகின்றன. முதிர்ச்சி அடைந்த மின்மினிப் பூச்சிகள் எச்சரிக்கை செய்வதற்காகவே ஒளியை உமிழ்வதாக முன்பு சொல்லப்பட்டது. ஆனால், ஆண் மின்மினியும் பெண் மின்மினியும் குடும்பம் நடத்துவதற்கு அழைப்பு விடுப்பதற்கே இந்த ஒளியை உமிழ்வதாகத் தற்போது தெரிவித்திருக்கிறார்கள், திவ்யதர்ஷினி.



















பழைய புத்தகக் கடையில் உருகும் கடிகாரங்கள் படத்தைப் பார்த்தேன். மிகவும் வித்தியாசமாக இருந்தது. அது புகழ்பெற்ற ஓவியமா, யார் வரைந்தது என்று தெரியுமா, டிங்கு?
 – பி. கார்த்திகா குமாரி, ஒண்டிப்புதூர், கோவை.
உருகும் கடிகார ஓவியங்கள் உலகப் புகழ்பெற்றவைதான், கார்த்திகா. இந்தப் படத்தை வரைந்தவர் ஸ்பெயினைச் சேர்ந்த சால்வடார் டாலி. மிகப் பெரிய ஓவியர். உருகும் கடிகாரங்கள் ஓவியத்தை, ‘நீங்கா நினைவு’ (The Persistence of Memory)  என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார்.
இந்த உருகும் கடிகார ஓவியங்களை வைத்து ஏராளமானவர்கள் ஆராய்ச்சிகளில் இறங்கியிருக்கிறார்கள். கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார்கள். நமக்கு நன்கு அறிமுகமான ஒரு மாயத் தோற்றம் (Optical illusion), வயதான ஆண், பெண் முகங்களில் இரு உருவங்கள்.
இந்தப் படத்தை வரைந்தவரும் இவரே. இதுபோன்ற இவரது பல படைப்புகளை நாமும் பார்த்திருப்போம். ஆனால் இவற்றை சால்வடார் டாலிதான் வரைந்திருக்கிறார் என்று நமக்குத் தெரிந்திருக்கவில்லை. இவரது மீசை மிக நீளமாகவும் மேல் நோக்கியும் நீண்டிருக்கும். ‘இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி’ திரைப்படத்தில் வடிவேலுவின் மீசை கூட இவரது மீசைபோலவே இருக்கும்.
Reactions

Post a Comment

0 Comments