அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

அன்றாட வாழ்வில் வேதியியல் 08: மக்னீசியம் இல்லேன்னா உலகம் என்ன ஆகும்?

பிப்பெட்: வணக்கம் பியூ. நாம சந்திச்சு ரொம்ப நாளேச்சேன்னு எல்லோரும் தேட ஆரம்பிச்சிட்டாங்க!
பியூரெட்: இருக்கட்டும் பிப். மனுசங்களுக்கு மட்டும்தான் தீபாவளியா, நமக்கும் அது கொண்டாட்டம் தானே, சொந்த ஊருக்கெல்லாம் போய் வர வேண்டாமா?
பிப்.: நீ சொல்றது ரொம்பச் சரி. அதான் இப்போ நாம திரும்ப வந்துட்டோமே, அதுனால எல்லோரும் மகிழ்ச்சி ஆயிடுவாங்க.
பியூ.: உன்கிட்ட உறுதியளிச்சது மாதிரியே தீபாவளிக்கு நான் பட்டாசு வெடிக்கலை. மத்தவங்க வெடிக்கி றதை மாடிலேர்ந்து பார்த்தேன்.
பிப்.: உனக்கு ரொம்ப நல்ல மனசுதான். சொன்ன சொல்லைக் காப்பாத்திட்ட. அடுத்தடுத்த வருசங்கள்ல மத்தவங்களும் பட்டாசு வெடிக்கிறதை குறைச்சுக்குவாங்கன்னு நம்புவோம்.
பியூ.: நீ கார்ட்டூன்லாம் பார்ப்பியா?
பிப்.: என்ன பியூ. இந்த வாரம் தனிமத்தைப் பத்திப் பேசாம, வேற எதைப் பத்தியோ பேசிக்கிட்டே போறோம்.
பியூ.: எல்லாம் ஒரு காரண மாத்தான். கார்ட்டூன் பத்திச் சொல்லு.
பிப்.: ஓ! நல்லா பார்ப்பேனே.
பியூ.: அப்ப உனக்கு ‘பாப்பய்' பத்தித் தெரியுமா?
பிப்.: ஒல்லியா, மாலுமித் தொப்பி போட்டுக்கிட்டு, எப்ப பார்த்தாலும் வாயில் புகைபிடிக்கும் குழாயை வைச்சுக்கிட்டு வருவானே, அவன்தானே?
பியூ.: சரியாச் சொன்னே, அதே பாப்பய்தான்.
பிப்.: ஆனா, பாப்பய் கார்ட்டுன் இப்ப டிவி அலைவரிசைகள்ல வர்றதே இல்ல. பாப்பய் பத்தி புதுசா ஏதும் சொல்லப் போறியா?
பியூ.: பாப்பய் பத்தி இல்ல, அந்த கார்ட்டூன்ல புளூடோவோட பாப்பய் மோதும்போது, உடனடி சக்தி கிடைக்க என்ன சாப்பிடுவான்னு உனக்குத் தெரியும்தானே?
பிப்.: ஆங்கிலத்துல ‘ஸ்பினாச்’னு சொல்லப்படுற பசலைக் கீரை.
பியூ.: ரொம்பச் சரி.
பிப்.: இப்ப பசலைக்கீரைக்கு என்ன?
பியூ.: பசலைக்கீரை நிஜமாவே ரொம்ப சத்தானது, தெரியுமா?
பிப்.: எப்படி?
பியூ.: எல்லா கீரையும் சத்தானதுதான். அதுலயும் பசலைக்கீரையில் மக்னீசியம் நிறைஞ்சிருக்கு. மக்னீசியம், மனித உடலுக்கு ரொம்ப அவசியமான சத்துக்கள்ல ஒண்ணு.
பிப்.: மனித உடலில் அதிகமுள்ள 11-வது தனிமம் மக்னீசியம்னு ஏற்கெனவே நீ சொல்லியிருக்க. நான் ஞாபகம் வெச்சிருக்கேன்.
பியூ.: மக்னீசியம் இல்லைன்னா, கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட உடல் செயல்பாடுகள் நடைபெறாது. முந்தைய வாரம் பார்த்த பாஸ்பேட்டைப் போலவே மனித செல்கள், 300 என்சைம்களுக்கு மக்னீசியம் உதவுகிறது. இந்த என்சைம்கள் உடலில் செயல்புரிய மக்னீசிய அயனிகள் தேவை.
பிப்.: சரி, அப்ப மனித உடலில் மக்னீசியம் குறைந்தால் என்ன ஆகும்?
பியூ.: மக்னீசியம் குறைபாடு சிறுநீரகச் செயல்பாடுகளையும் குடல்-இரைப்பை பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம். அது மட்டுமல்ல இயல்பற்ற நரம்புத் தூண்டல், ரத்தக்குழாய் விறைப்பு போன்றவற்றை மட்டுப்படுத்தவும் மக்னீசியம் பயன்படுத்தப்படுது.
பிப்.: மனுசங்களுக்கு மக்னீசியம் எப்படிக் கிடைக்குது?
பியூ.: பசலைக் கீரை மட்டுமில்லாம முட்டைக்கோஸ், பரங்கி விதை, பார்லி, சோயா, கொக்கோ, சமைக்கக்கூடிய இலைக் காய்கறிகள் போன்றவற்றில் மக்னீசியம் உள்ளது.
பிப்.: எல்லா காய்கறியுமே இலையுள்ள தாவரங்களில் இருந்துதானே காய்க்குது?
பியூ.: நீ சொல்றது சரிதான், நான் சொல்ல வந்தது சமைக்கப் பயன்படுத்தும் இலைகளைத்தான். பெரும்பாலான தாவரங்கள், காய்கறிகள்ல மக்னீசியம் அதிகமா இருக்கு.
பிப்.: அதுக்குக் காரணம்?
பியூ.: தாவரங்கள் பச்சையத்தை உருவாக்கவும் ஒளிச்சேர்க்கையை நடத்தவும் மக்னீசியம் அவசியம். மக்னீசியம் இல்லைன்னா, இந்த இரண்டு செயல்பாடுகளும் பாதிக்கப்படும், தொடர்ச்சியா தாவர வளர்ச்சியும் பாதிக்கப்படும். ஒவ்வொரு தாவர இலையிலும் சூரிய ஒளியை கிரகித்து உணவு தயாரிக்கும் பகுதியில மக்னீசியம் அதிகம் இருக்கும்.
பிப்.: அப்ப மக்னீசியம் ரொம்ப முக்கியம்தான்.
பியூ.: தாவர இலைகள் மட்டும்தான் என்றில்லை. எல்லா உயிரினங்களின் செல்களிலும் மக்னீசியம் இருக்கு.
பிப்.: ஓ! அப்படியா?
பியூ.: பிரபஞ்சத்தில் அதிகம் கிடைக்கும் ஒன்பதாவது தனிமம்; பூமியின் மேலோட்டில் அதிகம் கிடைக்கும் எட்டாவது தனிமம்; பூமியின் மொத்த எடையில் 13 சதவீதம்; இரும்பு, ஆக்சிஜன், சிலிகானுக்கு அடுத்தபடியா அதிகம் கிடைக்கும் தனிமம்; கடல் நீரில் கரைந்துள்ள சோடியம், குளோரினுக்கு அடுத்தபடியா அதிகமுள்ள தனிமமும் இதுதான்.
பிப்.: இத்தனை பெருமைகளா?
பியூ.: உலகிலுள்ள மக்னீசியம் அனைத்தையும் சேர்த்தால், செவ்வாய்க் கோளின் அளவுக்கு இருக்கும்.
பிப்.: இத்தனை பெருமைகளைக் கொண்ட இந்தத் தனிமத்துக்கு ஏன் மக்னீசியம்னு பேரு வெச்சாங்க?
பியூ.: கிரேக்கத்தின் ஒரு பகுதிக்கான கடவுள் மக்னீசியா. அந்தப் பகுதியில் மக்னீசியத் தாது அதிகம் கிடைச்சது. அதனால், அந்தப் பகுதியின் பெயரையே, இந்தத் தனிமத்தின் பெயராக வெச்சுட்டாங்க.
பிப்.: எல்லா புகழும் மக்னீசியாவுக்கும் மக்னீசியத்துக்கும் சேரட்டும்.
இந்த வாரத் தனிமம் - மக்னீசியம்

வெள்ளியைப் போன்ற வெள்ளை நிறத்தில் இருக்கும். பெரும்பாலும் ஆக்சிஜன், கால்சியத்துடன் இணைந்து சேர்மமாகவே காணப்படுகிறது. உலகில் இரும்பு, அலுமினியத்துக்கு அடுத்தபடியாக அதிகம் தேவைப்படும் உலோகம் இது. வலுவான, அதேநேரம் எடை குறைந்த கலப்பு உலோகங்களை உருவாக்க மக்னீசியம் பயன்படுத்தப்படுகிறது.

தொடர்புக்கு: valliappan@thehindutamil.co.in
நன்றி: 
இந்து தமிழ் திசை
Reactions

Post a Comment

0 Comments