அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

அன்றாட வாழ்வில் வேதியியல் 09: சிரிக்க வைக்கும் தூய்மையான தனிமம்



பிப்பெட்: வணக்கம் பியூ. ஒரு வழியா கஜா புயல் நிலத்தைக் கடந்திருச்சு.
பியூரெட்: ஆமா, டெல்டா மாவட்டங்கள்ல ரொம்பக் கடுமையான சேதம்னு கேள்விப்பட்டேன்.
பிப்.: டெல்டா மாவட்டங்களுக்குக் காவிரில தண்ணி வரலேன்னாலும் பிரச்சினை.
பியூ.: இப்போ, புயல் அடிச்சுப் பிரச்சினை.
பிப்.: உண்மைதான். நாம ஏதாவது செய்யணும். அதுக்கு முன்னாடி, இந்த வாரம் எந்தத் தனிமத்தைப் பத்திச் சொல்லப் போறே?
பியூ.: ஆக்சிஜன், கார்பன், ஹைட்ரஜன் பற்றி நமக்கு நிறையவே தெரியும். ஆனால், அதிக அளவில் இருந்தாலும் அதிகம் அறியப்படாத ஒரு தனிமம் இருக்கு. அது நைட்ரஜன்.
பிப்.: உலகத்துல நைட்ரஜன் அவ்வளவு அதிகமாகவா இருக்கு?
பியூ.: பூமியில் அதிகம் கிடைக்கும் தூய்மையான தனிமம் நைட்ரஜன். வளிமண்டலத்தில் இது ரொம்ப அதிகமாக இருக்கு. டைநைட்ரஜன் எனப்படும் நிறமற்ற, மணமற்ற இரண்டு நைட்ரஜன் மூலக்கூறுகளின் சேர்க்கையான வாயுவே, பூமியின் வளிமண்டலத்தில் 78 சதவீதம் நிறைந்துள்ளது.
பிப்.: அப்புறம் மனித உடலில் 3 சதவீதம் இருக்குன்னு நீ ஏற்கெனவே சொன்னது எனக்கு ஞாபகம் இருக்கே.
பியூ.: ஆமா, அனைத்து உயிரினங்களிலும் புரதம்-அமினோ அமிலமாகவும் டி.என்.ஏ., ஆர்.என்.ஏ.வில் நியூக்ளிக் அமிலமாகவும் நைட்ரஜன் உள்ளது.
பிப்.: வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனுக்கும் உயிருள்ள பொருட்களுக்கு இடையே தொடர்ந்து நைட்ரஜன் பரிமாற்றம் நடந்துகிட்டே இருக்குன்னு சொல்றாங்களே?
பியூ.: வளிமண்டலத்தில் இருக்கும் நைட்ரஜன் மின்னல் மூலமாக நைட்ரஜன் ஆக்சைடா மாறுது. ஆனாலும் அது கொஞ்சம்தான். வளிமண்டலத்தில் இருக்கும் நைட்ரஜனை, மண்ணில் அம்மோனியாவாக டைஅசோட்ரோபிக் என்ற பாக்டீரியா நிலைநிறுத்துது. இந்த அம்மோனியாவைப் பயன்படுத்தித் தாவரங்கள் புரதத்தை உருவாக்குகின்றன.
குறிப்பாகப் பருப்பு, மொச்சை வகைத் தாவரங்கள் புரதச்சத்து மிகுந்தவையாக உள்ளன. இவற்றைச் சாப்பிடும் உயிரினங்களின் உடலில் புரதம் செரிக்கப்பட்ட பிறகு, அவை நைட்ரஜன் கழிவை உருவாக்குகின்றன.

இந்த உயிரினங்கள் இறந்து, உருச்சிதைய ஆரம்பிக்கும்போது பாக்டீரியா மூலமாகவும் ஆக்சிஜனேற்றம், நைட்ரஜன் இறக்கம் நடைபெறுவதன் மூலமாகவும் மீண்டும் வளிமண்டலத்தில் நைட்ரஜன் கலந்துடுது.
பிப்.: இவ்வளவு பெரிய பரிமாற்றமா?
பியூ.: ஆமா, நைட்ரஜன்னா சும்மாவா. காற்றில் இருக்கும் நைட்ரஜன் மண் வழியாக இயற்கைப் பொருட்களுக்குச் சென்று மீண்டும் வளிமண்டலத்துக்குத் திரும்பும் இந்தச் செயல்பாட்டுக்கு, ‘நைட்ரஜன் சுழற்சி’ன்னு பெயர். இயற்கை சுழற்சிகளில் இது ரொம்ப முக்கியமானது.
பிப்.: அப்ப விவசாயத்துக்கு நைட்ரஜன் ரொம்ப அவசியம்.
பியூ.: நிச்சயமா, அதுதானே தழைச்சத்து.
பிப்.: போன வாரம் பார்த்த மக்னீசியம் மாதிரியே தாவரம், உயிரினம் ரெண்டுக்குமே நைட்ரஜனும் அவசியம்.
பியூ.: ஆமா, பிப். சரியா புரிஞ்சுக்கிட்டே.
பிப்.: உயிரினங்களின் வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் புரதச்சத்து ரொம்ப அவசியம்னு ஏற்கெனவே எனக்குத் தெரியும்.
பியூ.: நீ சொல்றது ரொம்பச் சரி. உயிரினங்களின் சதை புரதச் சத்தால்தான் கட்டமைக்கப்படுது. அது அழுகும்போது ஏற்படும் ஒருவித மணம், நைட்ரஜன்-அமின் சேர்மங்கள் அமினோ அமிலங்களாக புரதச் சிதைவு அடைவதே இதற்குக் காரணம்.
பிப்.: ஓ! இதுதான் அதுக்குப் பின்னாடி இருக்குற விஷயமா?
பியூ.: அதேநேரம் உணவு சேமிப்புத் துறையிலும் நைட்ரஜன் வாயு பயன்படுது. பதப்படுத்தப்பட்ட உணவு கெட்டுப்போகாமல் இருக்க நைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்துறாங்க. உணவுப்பொருட்கள் ஆக்சிஜனேற்றம் அடைவதை நைட்ரஜன் தடுக்குது.
பிப்.: விவசாயத்தைப் போலவே மனிதர்களுக்கும் நைட்ரஜனின் உதவிகள் அதிகமாத்தான் இருக்கு.
பியூ.: அப்படிச் சொல்ல முடியாது. நைட்ரேட் உர உற்பத்தித் தொழிற்சாலைகளின் கழிவும் அதிகப்படி நைட்ரேட் உரங்களும் நன்னீர் நிலைகள், கடலில் கலக்கும்போது அவை உயிரினங்களைக் கொல்லவும் செய்கின்றன. அதிகப்படி நைட்ரஜனால் பாக்டீரியா உற்பத்தி அதிகரிச்சு, நீரில் உள்ள ஆக்சிஜனை அவை உறிஞ்சிக்கொள்கின்றன. அதனால், ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரினங்கள் மடிகின்றன.
பிப்.: நல்லது, கெட்டது ரெண்டையும் சொல்லிட்ட, இந்த சிரிப்பூட்டும் வாயு பத்திச் சொல்லவேயில்லையே?
பியூ.: ஆமால்ல! ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் கலந்தால் தண்ணி. நைட்ரஜனும் ஆக்சிஜனும் சேர்ந்த கிடைப்பது நைட்ரஸ் ஆக்சைடு. இந்த வாயுவை சுவாசித்தால் மக்களின் மனதை லேசாக்கி, உற்சாகப்படுத்தும். அதனால், அதை சிரிப்பூட்டும் வாயுன்னு சொல்றாங்க.
பிப்.: டெல்டா மக்கள் வாழ்க்கையிலும் சீக்கிரமா சிரிப்பு வரட்டும். அதுக்கு நம்மளால ஆன வேலைகளைச் சீக்கிரமாச் செய்வோம் பியூ.
இந்த வாரத் தனிமம்: நைட்ரஜன்

குறியீடு: N
அணு எண்: 7
ஸ்காட்டிய மருத்துவர் டேனியல் ரூதர்ஃபோர்டு 1772-ல் நைட்ரஜனைக் கண்டறிந்து, பிரித்தெடுத்தார். அதேநேரம், நைட்ரஜன் என்ற பெயரைச் சூட்டியவர் பிரெஞ்சு வேதியியலாளர் ழீன் அன்டோய்ன் கிளாடு சாப்டால். மற்றொரு பிரெஞ்சு விஞ்ஞானி அன்டோய்ன் லவாய்சியே, அசோடு என்ற பெயரைப் பரிந்துரைத்தார்.
நைட்ரஜன் வாயுவுக்கு மூச்சுத் திணற வைக்கும் தன்மை உள்ளதால், உயிரைக் குடித்துவிடும் என்ற அர்த்தத்தில் இந்தப் பெயரை அவர் பரிந்துரைத்தார். நைட்ரஜனுக்கான பிரெஞ்சு, ரஷ்ய, துருக்கியப் பெயர்கள் இந்த அடிப்படையிலேயே அமைந்துள்ளன.
இன்றைக்கும் நைட்ரஜன் சேர்மங்கள் ஹைட்ரசீன், அசைடு, அசோ சேர்மங்கள் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகின்றன.

தொடர்புக்கு: valliappan@thehindutamil.co.in

நன்றி: 

இந்து தமிழ் திசை
Reactions

Post a Comment

0 Comments