அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

பிப்ரவரி – 2023 மாதத்திற்கான சிறார் திரைப்படம் ‘மல்லி’

பிப்ரவரி – 2023 மாதத்திற்கான சிறார் திரைப்படம் ‘மல்லி’

பள்ளிச் சிறார்களுக்கான திரைப்படங்கள் ஒவ்வொரு மாதமும் கல்வித் துறையால் பரிந்துரைக்கப்பட்டு அப்படங்கள் பள்ளிகளில் திரையிடப்படுகின்றன. அத்திரைப்படங்கள் பெரும்பாலும் பிறமொழிப் படங்களாக இருந்த நிலையில் இந்தப் பிப்ரவரி – 2023 மாதத்திற்கான சிறார் திரைப்படமாக முதன் முதலாகத் தமிழ் மொழியில் அமைந்த திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அத்திரைப்படத்தின் தலைப்பு ‘மல்லி’

‘மல்லி’ என்ற இச்சிறார் திரைப்படம் சந்தோஷ் சிவன் என்பவரால் இயக்கப்பட்ட திரைப்படமாகும். ஸ்வேதா, வனிதா போன்ற குழந்தை நட்சத்திரங்களோடு ஜனகராஜ் போன்ற ஜனரஞ்சக நட்சத்திரங்களும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

காட்டுச்சூழலில் வளரும் ‘மல்லி’ எனும் பழங்குடியினச் சிறுமியைச் சுற்றி இத்திரைப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது. இத்திரைக்கதை நிகழும் காலம் பள்ளி விடுமுறை காலமாகத் திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்குக் காட்டுப் பகுதிக்கு வருகை தரும் வன அலுவலரின் மகள் குக்கூவுக்கும் காட்டிலேயே வளர்ந்து வரும் மல்லிக்கும் நட்பு உண்டாகிறது.

மல்லி கனவுகளில் வாழும் சுட்டிப் பெண். குக்கூ காது கேளாத வாய் பேச முடியாத சிறப்புக் குழந்தை. குக்கூவுக்குக் காடு முழுவதையும் சுற்றிப் பார்க்க வேண்டும் ஆசை. காட்டில் இருக்கும் அபாயங்களைக் கருத்தில் கொண்டு அவள் காட்டைச் சுற்றிப் பார்ப்பதைத் தந்தையும் பாதுகாவலரும் தடுக்கும் நிலையில் மல்லியின் நட்பு குக்கூவிற்குப் பிடித்துப் போகிறது. மல்லிக்கும் குக்கூவைப் பிடித்துப் போகிறது.

மல்லிக்கு வயதான தோழர்களாகக் கதைசொல்லிப் பாட்டியும், லெட்டர் மாமா எனும் தபால்கார மாமாவும் இருக்கிறார்கள். கதைசொல்லிப் பாட்டி மூலமாக மயில் கடவுளின் சக்தி பற்றி அறிந்து கொள்கிறாள் மல்லி. மயில் கடவுள் சக்தியினால் நீலநிற மணி கிடைத்தால் வாய் பேசாத உயிர்களும் பேசும் என்பதை அறிந்ததிலிருந்து அம்மணியை எப்படியாவது அடைந்து அதன் மூலமாக அவளது தோழியான குக்கூவுக்குப் பேசும் திறனைக் கொண்டு வந்து விட வேண்டும் என்று கனவு காண்கிறாள் மல்லி. அத்துடன் அழகான பட்டுப்பாவாடை சட்டை அணிந்து கொள்ள வேண்டும் என்கிற கனவும் மல்லிக்கு இருக்கிறது. இவ்விரு கனவுகளும் எவ்வாறு நிறைவேறுகின்றன என்பதை அடுத்தடுத்து நிகழும் திரைக்காட்சிகள் காட்டுகின்றன.


முதல் ஒன்பதாம் வகுப்பு வரைப் பயிலும் மாணவர்களுக்குத் திரையிட்டுக் காட்டலாம்.

இத்திரைப்படத்தைக் காணவும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://drive.google.com/file/d/19hV3KHBlkbi7SUKs75MkXpW9Uu-aYGnn/view

*****

Reactions

Post a Comment

0 Comments