அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

பிளஸ் 2-க்கு பிறகு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்? - சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியின் ஆழமான பதில்

977239

பிளஸ் 2-க்குப் பிறகு படிப்பதற்கு நிறைய படிப்புகள் இருந்தாலும், பள்ளி மாணவர்களுக்கு அதில் அதிக தெளிவு தேவைப்படுகிறது. உயர் கல்வியை எப்படி பார்க்க வேண்டும்? எப்படி அணுக வேண்டும்? அதற்கு எத்தகைய கண்ணோட்டமும் தயாரிப்பும் தேவை? - இந்தக் கேள்விகள் மிகவும் அடிப்படையானவை மட்டுமல்ல; ஆழமானவையும்கூட. இத்தகைய கேள்விகளுக்கு ஆழமாக பதில் அளித்திருக்கிறார் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி.


பிளஸ் டூ தேர்வு எழுதியுள்ள மாணவர்களில் பலருக்கும் அடுத்து என்ன படிப்பது என்பதில் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. அத்தகைய மாணவர்களுக்கு உங்கள் வழிகாட்டுதல் என்ன? பொதுவாக அவர்கள் எந்தெந்த படிப்புகளை தேர்வு செய்யலாம் என கூறுவீர்கள்?


“முதலில் தாங்கள் விரும்பும் பாடத்தை மாணவர்கள் தேர்வு செய்து படிக்க வேண்டும். பெற்றோர்கள் திணிக்கக் கூடாது. திணிக்கப்பட்டால் மாணவர்களால் முழு மனதோடு படிக்க முடியாது. இதனால், மாணவர்களுக்கு நிறைய பின்னடைவுகள் ஏற்படுகின்றன. எனவே, பிடித்த பாடத்தை படிப்பது என்பது மிகவும் முக்கியம். பெற்றோர்கள் அதை அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு துறையிலும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, மாணவர்கள் தங்களுக்கு பிடித்ததை படிக்க வேண்டும்.



வணிகவியலில் நிறைய கோர்ஸ்கள் இருக்கின்றன. மருத்துவ தொழில்நுட்பம் சார்ந்த கோர்ஸ்கள் நிறைய இருக்கின்றன. இவை மட்டுமின்றி, Data Science, Artificial Inteligence ஆகிய பாடங்களும் இருக்கின்றன.


தற்போது ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளை படிக்கலாம் என யுஜிசி அறிவித்திருக்கிறது. காலையில் ஒரு படிப்பு, மாலையில் ஒரு படிப்பு என படிக்கலாம். மாலையில் படிக்கும் படிப்பை ஆன்லைன் கோர்சாகவும் எடுத்துக்கொள்ளலாம். மெட்ராஸ் ஐஐடியின் BS (Data Science), BS(Electronic System) ஆகிவற்றை மாலையில் படிக்கலாம். மாலையில் படிக்கும் இந்த படிப்புக்கு வயது கட்டுப்பாடு கிடையாது. யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அப்பாவும் மகனும்கூட சேர்ந்துகூட படிக்கலாம். இதில், ஒரு வருடம் மட்டும் படித்துவிட்டு ஃபவுண்டேஷன் சான்றிதழோடு முடித்துக்கொள்ளலாம். 2 வருடங்கள் மட்டும் படித்தால் டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்படும். 4 வருடங்கள் படித்தால் பட்டப்படிப்புக்கான சான்றிதழ் வழங்கப்படும். இதை 4 வருடத்தில்தான் முடிக்க வேண்டும் என்பது இல்லை. 6 வருடம் கூட எடுத்துக்கொள்ளலாம்.


இதுமட்டுமின்றி, மாணவர்கள் எந்த கல்லூரியில் படித்தாலும் ஐஐடியில் நடக்கும் வகுப்புகளின் வீடியோக்கள், பாடபுத்தகங்கள், டிஸ்கஷன் ஃபோரம், கேள்வி கேட்டு பதில்களைப் பெறுவது ஆகியவற்றை ஸ்வயம் (https://swayam.gov.in/) என்ற ஒரு வெப்சைட் மூலம் மாணவர்கள் பெற முடியும். ஆண்டுக்கு 40-50 லட்சம் பேர் இதில் பதிவு செய்கிறார்கள். இந்த முறையில் படிப்பவர்களுக்கு நாங்கள் பரீட்சையும் நடத்துகிறோம். அவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் நாங்கள் அவர்களுக்கு கிரேடு கொடுக்கிறோம்.


கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தின் அனுமதியோடு 40% கோர்ஸ்களை இதுபோல் அன்லைனில் படிக்கலாம் என்று AICTE (All India council for Technical education) அறிவித்திருக்கிறது. அப்படி நிறைய மாணவர்கள் மெட்ராஸ் ஐஐடியின் BS(Data Science), BS(Electronic System) படிப்புகளை படிக்கிறார்கள்.”



மாணவர்களைப் போலவே மாணவிகளும் எந்த ஒரு படிப்பையும் தேர்வு செய்ய முடியும் என்றாலும், மாணவிகளுக்கு ஏற்ற படிப்புகள் குறித்து அறிந்து கொள்ள விரும்பும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?


“சுரங்கத் துறை போன்ற சில துறைகள் வேண்டுமானால் பெண்களுக்கு ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம். ஐஐடிஎம்-ஐ பார்த்தீர்களானால் எங்களிடம் 17 துறைகள் இருக்கின்றன. எல்லா துறைகளிலும் மாணவிகள் இருக்கிறார்கள். எனவே, மாணவிகளாலும் மாணவர்களைப் போல் சமமாகப் படிக்க முடிகிறது. நாங்கள் மாணவிகளுக்கு 20 சதவீத இடம் ஒதுக்க வேண்டும். நாங்கள் அதை செய்து வருகிறோம்.”


படிக்கும் காலத்தில் படிப்பைத் தாண்டி மாணவர்கள் எத்தகைய திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்? அதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும்?


“கல்லூரிகளில் மாணவர்கள் பாடம் சார்ந்த அடிப்படைகளை நன்கு தெரிந்து கொள்ள முடியும். அதோடு, அவர்கள் நிறுவனங்களுக்குச் செல்லும்போது அங்கு அவர்களுக்கு ஒரு பிராப்ளம் கொடுக்கப்பட்டால் அதை அவர்கள் எவ்வாறு அப்ரோச் செய்ய வேண்டும் என்பதை நாங்கள் சொல்லிக்கொடுப்போம். படித்து முடித்துவிட்டு நிறுவனங்களுக்குச் செல்லும்போது அங்கு அவர்கள் ஒரு குறிப்பிட்ட மென்பொருள் மூலம் பணிகளை மேற்கொள்வார்கள். அந்த மென்பொருள் மூலம் நாங்கள் சொல்லிக்கொடுக்காவிட்டாலும், அந்த மென்பொருள் என்ன செய்கிறது என்பதை அவர்கள் கற்றுக்கொள்வார்கள். அதோடு, அங்கு சொல்லிக்கொடுப்பது இவர்களுக்கு நன்கு புரியும்.


உயர் கல்வி நிறுவனங்களின் நோக்கம், மாணவர்களுக்கு வேலை கிடைப்பதை உறுதி செய்வது; அதோடு, அவர்கள் ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்பினால் அதற்கான அடிப்படையை கற்றுத் தருவது.


மாணவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, அவர்கள் படிக்கும் பாடத்திற்கான ரெபரன்ஸ் புத்தகங்களில் ஏதேனும் ஒன்றை முன் அட்டை முதல் பின் அட்டை வரை முழுமையாக படிக்க வேண்டும். முன் அட்டை முதல் பின் அட்டை வரை வகுப்புகளில் பாடம் நடத்த முடியாது. முக்கியமானதை சொல்லிக்கொடுப்பார்கள். புரியும்படி சொல்லிக்கொடுப்பார்கள். பள்ளி வகுப்புகளைப் போல் இங்கு வகுப்புகள் இருக்காது. பள்ளிகளில் வரி வரியாக சொல்லிக்கொடுப்பார்கள். இங்கு வரிவரியாக சொல்லிக்கொடுக்க மாட்டார்கள். ஏனெனில், அது பொறியல் படிப்புக்கான வழி அல்ல.


ஒரு பாடம் சொல்லிக்கொடுக்கப்பட்ட பிறகு அதில் உள்ள பிராப்ளம்களை மாணவர்கள் தாங்களாகவே சால்வ் செய்ய வேண்டும். பிராப்ளம் சால்விங் ரொம்ப ரொம்ப முக்கியம். இதை செய்யத் தொடங்கிவிட்டால் பொறியியலில் நல்ல நுட்பம் வந்துவிடும். பிராப்ளம் சால்விங் பயிற்சி நன்றாக இருந்தால் வேலை கிடைப்பது எளிதாகிவிடும். வேலை பெறுவதற்காக தனியாக பயிற்சி பெறத் தேவை இருக்காது.


நிறைய கல்லூரி மாணவர்கள் எங்களிடம் வந்து கேட்பார்கள். பிளேஸ்மென்ட்டுக்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று. நாங்கள் சொல்வது இதுதான், பாடத்தை நன்றாக படித்துக்கொள்ளுங்கள். வேலை தானாக வரும்.”


எம்பிஏ படிப்பு யாருக்கு ஏற்றது? எம்பிஏ படிக்க விரும்புபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?


“நிர்வாகத் திறன் என்பது மிகவும் முக்கியம். சில நிர்வாகத் திறன்களை பிடெக்-லேயே சொல்லிக்கொடுக்கிறோம். இன்றைக்கு நிர்வாகம் என்பது தொழில்நுட்பத்தை சார்ந்ததாக மாறி இருக்கிறது. எனவே, தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் எம்பிஏ படித்தால் அவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. எடுத்துக்காட்டுக்கு, ஒரு சிவில் இன்ஜினியர், எம்பிஏ படித்திருந்தால் அது அவருக்கு இன்னும் சிறப்பாக கைகொடுக்கும். இதேபோல்தான், நிதித்துறையாக இருந்தாலும், வேறு துறையாக இருந்தாலும்.


மேலும், நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் வரத் தொடங்கிவிட்டது. எனவே, பொறியியல் படித்தவர்கள், தொழில்நுட்பம் படித்தவர்கள் எம்பிஏ படிப்பது அவசியமாகி இருக்கிறது.”


வெளிநாடுகளில் படிக்க விரும்புபவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன? அவர்கள் என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்?


“இந்தியாவிலேயே நிறைய படிப்புகள் இருக்கின்றன. இந்தியாவிலேயே படிக்கலாம். ஒருவேளை வெளிநாடுகளில் படிக்க வேண்டும் என்றால் அதில் தவறில்லை. டாப் 50 பல்கலைக்கழகங்களில் பல வெளிநாடுகளில் இருக்கின்றன. அமெரிக்கா மட்டுமல்ல, கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தைவான் என பல நாடுகளிலும் சிறந்த பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. அந்த பல்கலைக்கழகத்தின் ரேங்கிங்கை கருத்தில் கொண்டு நீங்கள் சேரலாம். அதுபோன்ற பல்கலைக்கழகங்கள் தனியாக நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன. சில பல்கலைக்கழகங்கள் நுழைவுத் தேர்வு இன்றியும் மாணவர்களை சேர்க்கின்றன.


என்னைப் பொறுத்தவரை பிஹெச்டி படிக்க வெளிநாடு செல்லலாம். இந்தியாவிலேயேகூட பிஹெச்டி படிக்கலாம் என்றாலும், வெளிநாடு செல்ல விரும்புபவர்கள் படிஹெச்டிக்காக செல்லலாம். மாஸ்டர் டிகிரிக்காக செல்வதைவிட பிஹெச்டிக்காக செல்வது நல்லது.”


மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்க உங்கள் டிப்ஸ் என்ன சார்?


“பிடித்த பாடத்தை தேர்ந்தெடுத்திருந்தால் நிச்சயம் படிப்பில் கவனமாக இருப்பார்கள். ஒருவேளை கிடைத்ததை தேர்ந்தெடுத்துவிட்டாலும் பரவாயில்லை. பிடித்த மற்றொரு படிப்பை ஆன்லைனில் படிக்கலாம். ஏனெனில், தற்போது ஒரே நேரத்தில் இரண்டு டிகிரி படிக்க முடியும். கணினி மென்பொறியாளர் என்பது தற்போது பெரிதானதாக கருதப்படுவதில்லை. பொறியாளர் என்பதுதான் முக்கியம் என்ற கட்டாயத்துக்கு நாம் வந்திருக்கிறோம். அதானால்தான் தற்போது எல்லாமே Interdisciplinary education ஆக மாறிக்கொண்டிருக்கிறது.


ஒரு ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டால் அதில் கணினி மென்பொருள் இருக்கிறது. எலக்ட்ரிக் இருக்கிறது. எலக்ட்ரானிக்ஸ் இருக்கிறது. மெக்கானிக்கல் இருக்கிறது. மெட்டலாஜி இருக்கிறது. இப்படி 7-8 சேர்ந்ததுதான் ஒரு சின்ன ஸ்கூட்டரே. வாஷிங் மெஷினை எடுத்துக்கொண்டாலும் இத்தனையும் நாம் பேச முடியும்.


சமூகத்துக்குத் தேவையான ஒரு பொருளை நாம் தயாரிக்க வேண்டும் என்றால், இந்த Interdisciplinary knowledge நமக்குத் தேவைப்படுகிறது. எனவே, இரண்டாவதாக ஒரு பட்டப்படிப்பை படிப்பதற்கான வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.”


சென்னை ஐஐடி-யின் கண்டுபிடிப்புகள், சமூகத்துக்கான பங்களிப்புகள் குறித்து...


“தற்போது நாங்கள் innovation and entrepreneurship-ஐ பெரிதாகக் கொண்டு வந்து கொண்டிருக்கிறோம். சமூகத்துக்குத் தேவையான பல்வேறு திட்டங்களை நாங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறோம். Rural Technology Incubater என்று ஒன்று இருக்கிறது. இதன்மூலம் கிராமப்புறங்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.


Centre for innovation என்று ஒன்று வைத்திருக்கிறோம். இதன்மூலம் ஒரு ஐடியாவோடு வந்தால் அதனை டிசைனாக மாற்றுகிறோம். டிசைனை ப்ராடக்டாக மாற்றுகிறோம். ப்ராடக்ட்டை ப்ரோட்டோ டைப்பாக மாற்றுகிறோம். ப்ரோட்டோ டைப்பை அவர்கள் ஸ்டார்ட் அப்பாக எடுத்து நடத்தலாம். இப்படி 300 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஐஐடி மெட்ராஸ் மூலம் உருவாக்கி இருக்கிறோம்.


அடுத்ததாக டென் எக்ஸ் என ஒரு ப்ரோக்ராம் செய்திருக்கிறோம். இதன்மூலம் எல்லா Incubater-ஐயும் நாங்கள் சேர்ந்து கொண்டு வருகிறோம். ஒரு கல்லூரியில் Incubater செல் இருக்குமானால் அவர்கள் எங்கள் Incubater-ரோடு சேர்ந்து செயல்படலாம். ஒரு கல்லூரியில் இன்குபேட்டர் இல்லை என்றாலும், அந்த நிறுவனங்களுக்கு நாங்களே நேரடியாக எங்களால் முடிந்த மென்ட்டைார்ஷிப்பையும் நாங்கள் செய்கிறோம்.


இப்படி ஒட்டுமொத்த இன்குபேட்டர் மற்றும் entrepreneurship கான்சப்டை பெரிதாக எடுத்துச் செல்வதற்காக ஐஐடி மெட்ராஸ் நிறைய வேலை செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக இரண்டு ப்ராடக்ட்டுகள் குறித்து சொல்கிறேன். ஒன்று செப்டிக் டேங்க் கிளீனர். இது தற்போது வர்த்தக ரீதியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மனிதக் கழிவுகளை மனிதர்களே எடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் கூறி இருக்கிறது. எனவே, அந்த ப்ராடக்ட் தற்போது பல பஞ்சாயத்துக்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


இதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனம். வீல் சேரில் வருபவர்கள் நேராக அந்த வாகனத்தில் ஏறி அதனை ஓட்டிச் செல்லலாம்.


செயற்கை கால். ஃபேண்ட் போட்டுக்கொண்டால் செயற்கைக் கால் இருப்பதே தெரியாது. அவர்களால் மற்றவர்களைப் போலவே நடக்க முடியும். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கிறது. இப்படி சமூகத்துக்குத் தேவையானபல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.


மாணவர்கள் தற்கொலைக்கான காரணங்கள் என்னென்ன? இதனை எவ்வாறு தடுப்பது?


“படிப்பு சார்ந்த சிரமங்கள், தனிப்பட்ட சிரமங்கள், நிதி சார்ந்த சிரமங்கள், மருத்துவ பிரச்சினைகள் என இதற்கு நான்கு காரணங்கள் இருக்கின்றன. இந்த நான்குமே கலந்தும் இருக்கலாம். இந்த கோவிட் காலத்தில் மாணவர்களின் சமூக தொடர்பும் குறைந்துபோய்விட்டது. மாணவர்களில் பலர் வீட்டிலேயே இருந்துவிட்டு திடீரென கல்லூரிக்கு வருகிறார்கள். இது சமூகம் சார்ந்த சிரமங்களை ஏற்படுத்துவதாக உலக சுகாதார நிறுவனமும் ஒப்புக்கொண்டிருக்கிறது.


மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த செயல்களைச் செய்ய முடிந்தால் அவர்களுக்கு மன அழுத்தம் இருக்காது. இரண்டாவது, இணை திறன் அதாவது ஏதாவது பாடல் பாடுவது, ஆடுவது, இசை இசைப்பது, ஓவியம் வரைவது, போட்டோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு மன அழுத்தம் குறைவாகவே இருக்கிறது. எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் சிறியவர்களாக இருக்கும்போதே, ஏதாவது ஒன்றில் ஈடுபாடு கொள்பவர்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.”


நாட்டின் வளர்ச்சிக்கும் அதன் எதிர்கால இலக்குகளை அடையவும் நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?


“வரும் 2047-ல் இந்தியா வல்லரசாக மாற வேண்டும். இன்றைய மாணவர்கள், இளைஞர்கள் நாளை தலைவர்களாக வர வேண்டும். இதற்கு இந்தியாவில் நிறைய வேலை வழங்குபவர்கள் தேவை. வேலை பார்ப்பவர்கள் தேவை. இதற்கு எல்லோரும் innovation and entrepreneurship-ல் கவனம் கொடுக்க வேண்டும்.


நீடித்த நிலையான வளர்ச்சி என்பது மிகவும் முக்கியமானது. எதிர்காலத்திலும் இதேபோன்ற மின்சாரம் கிடைக்குமா; தண்ணீர் கிடைக்குமா; காற்று கிடைக்குமா; சுற்றுச்சூழல் கிடைக்குமா என்ற கேள்விகள் முக்கியமானவை. நீடித்த நிலையான வளர்ச்சிக்கு இப்படி 17 நீடித்த நிலையான வளர்ச்சிக்கான விஷயங்கள் இருக்கின்றன. நாம் படிக்கும் எல்லா படிப்புமே இந்த நீடித்த நிலையான வளர்ச்சியோடு இணைந்து போக வேண்டும்.


நீடித்த நிலையான வளர்ச்சிக்கான 17 இலக்குகள் குறித்து அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டும். குழைந்தைகளுக்கும் எடுத்துக்கூற வேண்டும். இதற்கு ஏற்ப நாமும் யோசிக்க பழக வேண்டும். நீடித்த நிலையான வளர்ச்சிக்காக நாம் பல்வேறு உத்தரவாதங்களை வழங்கி இருக்கிறோம். கரியமில வாயுவை பூஜ்ஜியமாக குறைப்போம் என கூறி இருக்கிறோம். இதை குறுகிய காலத்தில் நாம் அடைய வேண்டுமானால், அரசின் கட்டுப்பாடுகளால் முடியாது. பொதுமக்கள் அனைவரின் பங்களிப்போடு இது நிகழ வேண்டும்.


நான்காவது, நாம் எல்லாவற்றையும் பேட்டர்ன் செய்ய வேண்டும். நமது ஐடியாவை நாம் ப்ரடக்ட் செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அதன் முழுமையான தாக்கம் நமக்கு கிடைக்கும். எனவே, கல்லூரி அளவிலும் சரி , தனி நபர் அளவிலும் சரி தங்களுக்கு கிடைக்கும் ஐடியாவை பேட்டர்ன்செய்ய வேண்டும் என எண்ண வேண்டும். இந்தியா வல்லரசாக மாற இது மிகவும் முக்கியம்.”

Reactions

Post a Comment

0 Comments