அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

அரசு பள்ளிகளில் காலாண்டு தேர்வில் 4, 5-ம் வகுப்புகளுக்கு ஒரே வினாத்தாள்: மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி

1126716

அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பாடப்புத்தகங்களை பயன்படுத்தாமல், பயிற்சி புத்தகங்கள் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.


1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப். 19-ம் தேதியிலிருந்து முதல் பருவத் தேர்வை (காலாண்டுத் தேர்வு) இணையவழியாக நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது.


இந்நிலையில் திடீரென 1 முதல் 3-ம் வகுப்பு வரை மட்டும் இணையவழியாக நடத்தவும், 4, 5-ம் வகுப்புகளுக்கு செப். 20-ம் தேதியிலிருந்து வினாத்தாள் மூலம் நடத்தவும் உத்தரவிடப்பட்டது. மேலும் அதற்கான வினாத்தாள்கள் ஆன்லைன் செயலி மூலம் ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதை பதிவிறக்கம் செய்து நகலெடுத்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.


ஆனால் செப். 20-ம் தேதி ‘சர்வர்’ பிரச்சினையால் 4, 5-ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் நடக்கவில்லை. நேற்று 4, 5-ம் வகுப்புகளுக்கு தமிழ் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் இரு வகுப்புகளுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்பட்டது. இதனால் மாணவர்கள் தேர்வை சரியாக எழுதவில்லை. மேலும் வெவ்வேறு பாடத்திட்டங்களை நடத்திவிட்டு ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கியதால் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்.


இதுகுறித்து சிவகங்கையைச் சேர்ந்த ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: மாணவர்கள் படிப்புக்கும் திறனுக்கும் ஏற்ப அரும்பு, மொட்டு, மலர் என 3 விதமாக பிரிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மூன்று விதமாக வினாத்தாள்கள் கொடுத்து தேர்வு நடத்தப்பட வேண்டும். அதன்படி 4-ம் வகுப்புக்கு மூன்று விதமான வினாத்தாள்கள் வந்தன. அதேபோல் 5-ம் வகுப்புக்கும் 4-ம் வகுப்புக்குரிய அதே மூன்று வினாத்தாள்களே வந்தன. இதனால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.


ஏற்கெனவே பாடப்புத்தகங்கள் இல்லாமல் பயிற்சி புத்தகம் மூலம் பாடங்கள் எடுப்பதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 4, 5-ம் வகுப்புகளுக்கு வினாத்தாள்களை ஒரே மாதிரியாக வழங்கியதால் பெற்றோர் எங்களிடம் ஆட்சேபம் தெரிவித்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Reactions

Post a Comment

0 Comments