அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு

1323339

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது, 50 சதவீத இடங்களை நேரடியாகவும், 48 சதவீத இடங்களை இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கியும், எஞ்சிய 2 சதவீத இடங்களை தகுதிபெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதன் மூலமும் நிரப்ப கடந்த 2007-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.


ஆனால், இந்த அரசாணைப்படி தங்களுக்கு 2 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அமைச்சுப் பணியாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதன்படி இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், “அமைச்சுப் பணியாளர்களுக்கு 2 சதவீத இடஒதுக்கீடு வழங்காமல் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்யக்கூடாது” என நியமனங்களுக்கு இடைக்கால தடை விதித்து ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.


இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘கடந்த 2014-15 முதல் 2024-25 வரை அமைச்சுப் பணியாளர்களுக்கு 2 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 130 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அந்த உத்தரவுக்காக காத்திருக்கிறோம். மேலும், இந்த வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக உள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்’ என கோரப்பட்டது.


அதையேற்ற நீதிபதி இந்த வழக்கு விசாரணையை வரும் அக்.17-க்கு தள்ளி வைத்தார். மேலும், “ஆசிரியர் தகுதித்தேர்வில் தகுதிபெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு முதல் உரிய பதவி உயர்வு வழங்கப்படாததால், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு மனுதாரர்களின் கோரிக்கையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.” எனக்கூறி பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Reactions

Post a Comment

0 Comments