அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை - விண்ணப்பிக்க அவகாசம் நீடிப்பு

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் கால வரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 56 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தொழில் நுட்பப் பட்டயப் (டிப்ளமோ) படிப்புகளுக்கு 20,635 இடங்கள் உள்ளன. இதில் முதலாமாண்டு மற்றும் பகுதி நேர படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இணைய வழியில் கடந்த மே 7-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. முதலாமாண்டு பட்டயப் படிப்புகளுக் கு 11,140 பேர் விண்ணப்பித்துள்ளனர். நேரடி 2ம் ஆண்டு படிப்பில் சேர 12,184 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.


இதற்கிடையே மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் பாலிடெக்னிக் கல்லூரி சேர்க்கைக்கான அவகாசமானது கால வரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் www.tnpoly.in/ எனும் வலைத்தளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பிக்கும் வழி முறைகள், கட்டணம் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத் தளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இது தவிர கல்லூரிகளே இனி நேரடியாக விண்ணப்பங்களை வழங்கி சேர்க்கை நடத்தி கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 68 சதவீத இடங்கள் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டன. இந்த ஆண்டு சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிக்கல்வித் துறையிடம் இருந்து கடந்த 2 ஆண்டுகளாக உயர் கல்வி தொடராதவர்கள் மற்றும் பத்தாம் வகுப்புக்கு பின்பு இடைநின்ற மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. அத்தகைய மாணவர்களை தொடர்பு கொண்டு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ப்பதற்கான பணிகள் தற்போது முடுக்கிவிடப் பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Reactions

Post a Comment

0 Comments